தனியார் வைத்தியசாலைகளுடன் இணைந்து PCR பரிசோதனை

தனியார் வைத்தியசாலைகளின் ஒத்துழைப்புடன் PCR பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை

by Bella Dalima 23-04-2020 | 7:03 PM
Colombo (News 1st) தனியார் வைத்தியசாலைகளின் ஒத்துழைப்புடன், COVID -19 தொற்றைக் கண்டறிவதற்கான PCR பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த 4 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளமை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று (22) மாலை மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் இவர்கள் தொற்றுக்கு இலக்காகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் வசிக்கும் சிலருக்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கும் இன்று PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதேவேளை, அண்மையில் பிலியந்தலையில் இனங்காணப்பட்ட COVID -19 தொற்றுக்கு இலக்காகியவரின் தாயாரும் தொற்றுக்குள்ளான சந்தேகத்தின் பேரில் ஹோமகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொற்றுக்கு இலக்காகியவர் பிலியந்தலை பகுதியின் ஜே.டி. சாலமன் மாவத்தையைச் சேர்ந்தவர் என்பதுடன், அவரது கணவர் இலங்கை போக்குவரத்து சபையில் பணியாற்றுபவர் என பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, பொலன்னறுவை மாவட்டத்தின் லங்காபுர பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 12 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. லங்காபுர , வீரபுர, பூமாடிய, புலஸ்திகம, அபயபுர, சோமபுர, பௌத்தார்தகம, சங்கபோதிகம, அல்ஹிலால் புர, ரிஃபாய்புர, தம்பால, பட்டுநுகம ஆகிய கிராமங்களே தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. பூமாடிய கிராமத்தைச் சேர்ந்த 11 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேர் மட்டக்களப்பிலுள்ள இரண்டு தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டனர். 12 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தமது வீடுகளில் சுய தனிமைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த 12 கிராமங்களிலும் 1000 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். கடற்படை வீரர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியமையைத் தொடர்ந்து, பூமாடியா கிராமம் மூடப்பட்டுள்ளது. வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றும் வீரர் ஒருவர் விடுமுறையில் பூமாடியா கிராமத்திற்கு கடந்த 18 ஆம் திகதி சென்றுள்ளார். இதேவேளை, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கை போக்குவரத்து சபையின் அனுராதபுரம் டிப்போ மூடப்பட்டது. தொற்றுக்கு இலக்காகியுள்ள கடற்படை வீரரின் அயலவர் குறித்த டிப்போவில் பணியாற்றியதன் காரணமாக இந்த தீர்மானம் எட்டப்பட்டது. பாதிக்கப்பட்ட கடற்படை வீரருடன் தொடர்புடைய போக்குவரத்து சபை பணியாளர்களும் கண்டறியப்பட்டுள்ளனர். அனுராதபுரம் மாநகர சபையின் வைத்திய அதிகாரி மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர் ஆகியோர் இன்று அனுராதபுரம் டிப்போவை மேற்பார்வை செய்தனர். அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் டிப்போ மீண்டும் திறக்கப்பட்டது.