ஒருதலைப்பட்சமாக பாராளுமன்றத்தைக் கூட்டும் எண்ணம் இல்லை: கரு ஜயசூரிய தெரிவிப்பு

ஒருதலைப்பட்சமாக பாராளுமன்றத்தைக் கூட்டும் எண்ணம் இல்லை: கரு ஜயசூரிய தெரிவிப்பு

ஒருதலைப்பட்சமாக பாராளுமன்றத்தைக் கூட்டும் எண்ணம் இல்லை: கரு ஜயசூரிய தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

23 Apr, 2020 | 8:19 pm

Colombo (News 1st) அரசியலமைப்பு பேரவை இன்று கூடியது.

கூட்டத்தின் பின்னர் பேரவையின் உறுப்பினர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க கருத்து வௌியிட்டார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் கூட அரசியலமைப்பின் மூலம் கிடைத்துள்ள அதிகாரத்தின் பிரகாரம் அரசியலமைப்பு பேரவையால் கூட முடியும் என பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

மேலும், பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான அதிகாரம் சபாநாயகருக்கு இருப்பதாக தாம் நினைக்கவில்லை எனவும், உயர் நீதிமன்றத்தின் மூலமே அதனை தௌிவுபடுத்திக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியிடமே அதிகாரம் உள்ளது. உயர் நீதிமன்றத்தில் பொருட்கோடலை அவரால் கோர முடியும். அரசியலமைப்பை பாதுகாப்பதாக அவர் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார். உயர் நீதிமன்றத்தின் கருத்தை கேட்டறிவதே தற்போது மிகவும் உகந்தது. பொதுத்தேர்தல் ஜுன் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அவ்வாறெனில் ஜனாதிபதி விடுத்துள்ள வர்த்தமானி ஏற்கனவே இரத்தாகியுள்ளது. அவரால் பாராளுமன்றத்தை 14 ஆம் திகதி கூட்டுவதற்கு முடியாது. பொறுப்புள்ள அரச தலைவர் என்ற வகையில், அவர் உயர் நீதிமன்றத்தில் வினவவேண்டும். அது அவருக்கு அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள பொறுப்பாகும். அவர் விரும்பியவாறு செய்வதற்கல்ல

என பிமல் ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஒருதலைப்பட்சமாக பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு எவ்வித எண்ணமும் இல்லை என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று அரசியலமைப்பு பேரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

கொரோனா நெருக்கடியை சந்தித்துள்ள நாட்டிற்கு அரசியலமைப்பு நெருக்கடி அநாவசியமானது என கரு ஜயசூரிய கூறியுள்ளார்.

இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து முரண்பாடுகள் ஏற்படுகின்ற போது உயர் நீதிமன்ற உத்தரவிற்கு மதிப்பளிக்க தாம் கட்டுப்பட்டுள்ளதாகவும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.

சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று நடைபெற்ற அரசியலமைப்பு பேரவைக் கூட்டத்தில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இரா.சம்பந்தன், தலதா அத்துக்கோரள, மஹிந்த சமரசிங்க, பிமல் ரத்நாயக்க, என்.செல்வகுமாரன், அஹமட் ஜாவட் யூசுஃப் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

சிவில் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கலாநிதி ஜயந்த தனபால இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்