மார்ட்டீஸ் ஒழுங்கையை சேர்ந்த 10 பேர் கண்காணிப்பு நிலையத்திற்கு அனுப்பி வைப்பு

by Staff Writer 22-04-2020 | 8:30 PM
Colombo (News 1st) இன்று முற்பகல் பண்டாரநாயக்க மாவத்தையை அண்மித்துள்ள மார்ட்டீஸ் ஒழுங்கையை சேர்ந்த மேலும் 10 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இராணுவ அதிகாரிகள் மற்றும் சுகாதாரப் பிரிவின் அதிகாரிகளின் ஆலோசனையின் பிரகாரம், இவர்கள் தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். பண்டாரநாயக்க மாவத்தை , MFM லாபிர் மாவத்தை , அப்துல் ஜவ்பர் மாவத்தை, பழைய சோனகத் தெரு, அப்துல் ஹமீட் மாவத்தை, மீரானிய வீதி மற்றும் பிரின்ஸ் ஓஃப் கேட் மாவத்தை பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எக்காரணங்களுக்காகவும் இந்தப் பகுதிக்குள் யாரும் பிரவேசிக்கவோ, இங்கிருந்து வௌியேறவோ முடியாது. தெமட்டகொடை - தோமஸ் ஒழுங்கையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் இரணைமடு தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஒரு குழந்தை உட்பட நான்கு சிறார்களும் இந்தக் குடும்பத்தில் அடங்குகின்றனர். இதேவேளை, வெல்லம்பிட்டிய - பொல்வத்தை பகுதியில் கொரோனா தொற்றுக்கு இலக்கானதாக சந்தேகிக்கப்படும் ஒருவருக்கு​ PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பண்டாரநாயக்க மாவத்தையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் இந்தப் பகுதிக்கு கடந்த வாரம் வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் வெல்லம்பிட்டியவில் நடமாடிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகலகம் வீதி உள்ளிட்ட மேலும் சில பகுதிகள் இன்னமும் திறக்கப்படவில்லை. குறித்த பகுதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புறக்கோட்டையின் பல்வேறு பகுதிகளிலும் இன்று கிருமித்தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கோட்டை புகையிரத நிலையம் , ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகவுள்ள காரியாலயப் பகுதி, புறக்கோட்டையின் பிரதான வீதிகள் உள்ளிட்ட பகுதிகளில் தொற்று நீக்கம் செய்யப்பட்டது. பொலிஸ் வாகனங்கள் இந்த நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டன. பிலியந்தலை நிவந்திட்டிய கிராமோதய மாவத்தையில் அண்மையில் தொற்றுக்கு இலக்கான மீன் வியாபாரியுடன் தொடர்பினைக் கொண்டிருந்த 23 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியை அண்மித்திருந்த மேலும் 11 பேரை PCR பரிசோதனைக்கு உட்படுத்திய நிலையில், அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார். இவர்களில் சிலர் மீண்டும் கண்காணிப்பிற்குட்படுத்தப்பட்டுள்ளனர். பாடசாலை மாவத்தை மற்றும் கிராமோதய மாவத்தையிலுள்ள வீடுகளிலுள்ள 25 குடும்பங்களைச் சேர்ந்த 81 பேருக்கு சுயதனிமைக்கு உட்படுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்