பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த 1020 பேர் தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு அனுப்பி வைப்பு

by Staff Writer 21-04-2020 | 3:27 PM
Colombo (News 1st) கொழும்பு -12, பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த 1020 பேர் தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியிலுள்ள பலரிடம் கொரோனா தொற்று ஆய்விற்கான மாதிரிகள் பெற்றப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அத்தியட்சகர் ருவன் விஜயமுனி குறிப்பிட்டார். பண்டாரநாயக்க மாவத்தையிலுள்ள 107, 137, 166 ஆம் இலக்க தோட்டங்களை சேர்ந்தவர்களே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்த பகுதியில் நேற்று 31 நோயாளர்கள் பதிவாகியுள்ளமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பண்டாரநாயக்க மாவத்தையிலுள்ள 107, 137, 166 ஆம் இலக்க தோட்டங்களை அண்மித்த பகுதியிலுள்ள ஏனைய 06 தோட்டங்களும் தற்போது முடக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அத்தியட்சகர் ருவன் விஜயமுனி தெரிவித்தார். ஆமர் வீதி பகுதியிலும் கல்வல பகுதியிலும் முழுமையாக மூடி இந்த பகுதி முடக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்போரிடமும் கொரோனா தொற்று ஆய்விற்கான மாதிரிகள் பெறப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அத்தியட்சகர் ருவன் விஜயமுனி குறிப்பிட்டார். இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 309 ஆக அதிகரித்துள்ளது. கொழும்பு - 12 , பண்டாரநாயக்க மாவத்தையில் 05 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.