இலங்கை மாணவர்களை அழைத்து வர நடவடிக்கை

சார்க் வலய நாடுகளில் உள்ள இலங்கை மாணவர்களை அழைத்து வர நடவடிக்கை

by Staff Writer 21-04-2020 | 3:08 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், வௌிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களை மீள அழைத்து வருவதற்கான விசேட வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. முதல் கட்டமாக சார்க் வலய நாடுகளில் உள்ள இலங்கை மாணவர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, பாகிஸ்தானில் சிக்கியுள்ள 115 மாணவர்களை விசேட விமானத்தினூடாக இன்று நாட்டிற்கு அழைத்து வரவுள்ளதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் நடவடிக்கை பிரிவு பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகர குறிப்பிட்டார். இந்தியாவில் உள்ள இலங்கை மாணவர்கள் 102 பேரும் நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளனர். நாட்டிற்கு அழைத்துவரப்படும் மாணவர்களை உரிய வழிமுறைகளின் கீழ் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக ஷெஹான் சுமனசேகர தெரிவித்தார். இவர்களைத் தவிர ஏனைய நாடுகளிலும் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களை மீள அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர், மலேசியா, அவுஸ்திரேலியா, ரஷ்யா போன்ற நாடுகளில் இலங்கை மாணவர்கள் உள்ளதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் நடவடிக்கை பிரிவு பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகர குறிப்பிட்டார்.