by Staff Writer 21-04-2020 | 4:34 PM
Colombo (News 1st) இறை இல்லம் தேடிச்சென்றவர்களை ஈனர்கள் கொன்றொழித்த துன்பியல் நிகழ்வு இடம்பெற்று இன்றுடன் ஓராண்டாகிறது.
உலக மீட்பிற்காக தனது இன்னுயிரை ஈந்த இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு விழாவினை உவகையுடன் கொண்டாடச் சென்றவர்களை உடலே கிடைக்காத வகையில் சிதறச் செய்த குண்டுவெடிப்பு இதே நாளில் கடந்த ஆண்டு இடம்பெற்றிருந்தது.
மூன்று தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் நடத்தப்பட்ட கோரக்குண்டுத்தாக்குதல்களில் சுமார் 300 பேரின் இன்னுயிர் காவுகொள்ளப்பட்டதுடன், பலர் அங்கவீனமடைந்தனர். 500-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
உயிர்த்த ஞாயிறு தினமான அன்று கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயம் ஆகியவற்றில் திருப்பலியும், மட்டக்களப்பிலுள்ள சீயோன் தேவாலயத்தில் ஞாயிறு ஆராதனையும் இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தற்கொலைக் குண்டுதாரிகள் தாக்குதல் நடத்தினர்.
அத்துடன், நாட்டின் பிரசித்தி பெற்ற நட்சத்திர ஹோட்டல்களில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் வௌிநாட்டவர்கள் பலரும் பாதிப்புகளை எதிர்நோக்கினர்.
இந்தத் தாக்குதல்கள் நாட்டு மக்களை சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியதுடன், ஆற்ற முடியா ரணங்களை மக்கள் மனங்களில் விதைத்துள்ளன.
தாக்குதல்களில் தாய், தந்தை, பிள்ளைகள், சகோதரர்கள், உற்றார், உறவினர், நண்பர்களைப் பறிகொடுத்தவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாதவை.
அவர்கள் இழந்தவை, எவற்றாலும் ஈடு செய்ய முடியாதவை.
இந்த தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே ஓராண்டு நிறைவடைந்தும், நாம் அனைவரும் ஏங்கிக் காத்திருக்கும் விடயமாக மாறிப்போயுள்ளது.
இந்த அழிவுகளுக்குக் காரணமானவர்கள் யாராகவிருப்பினும் தராதரம் பாராது தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே பலரினதும் கோரிக்கையாகவுள்ளது.