ஏப்ரல் 21 தாக்குதல்: நாடளாவிய ரீதியில் சர்வமத வழிபாடுகள் முன்னெடுப்பு 

ஏப்ரல் 21 தாக்குதல்: நாடளாவிய ரீதியில் சர்வமத வழிபாடுகள் முன்னெடுப்பு 

எழுத்தாளர் Staff Writer

21 Apr, 2020 | 8:30 pm

Colombo (News 1st) ஏப்ரல் 21 ஆம் திகதி – இலங்கை வரலாற்றில் குருதியால் எழுதப்பட்ட கறுப்பு நாள்.

இத்தகைய பெருந்துயர் மீண்டும் ஏற்படக் கூடாது என பிரார்த்தித்து இன்று சர்வமத அனுஷ்டானங்கள் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்டன.

குரோதத்தை அகற்றி நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் நடைபெற்றன.

கொழும்பு பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் விசேட நினைவு ஆராதனை நடைபெற்றது.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று காலை 8.45 மணியளவில் ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்தும் அவர்களின் ஆத்மசாந்திக்காகவும் விசேட பிரார்த்தனை இடம்பெற்றது.

ஆலய முன்றலில் தேவாலய குருமார்களால் ஆராதனை முன்னெடுக்கப்பட்டதுடன், பொதுமக்கள் கண்ணீர் மல்க இதில் கலந்துகொண்டிருந்தனர்.

கடந்த வருடம் மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு உள்ளாகிய கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திலும் விசேட ஆராதனை நடைபெற்றது.

மட்டக்களப்பு – சீயோன் தேவாலயத்தில் கடந்த வருடம் இடம்பெற்ற ஏப்ரல் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நல் மோட்சம் கருதி ஆராதனை முன்னெடுக்கப்பட்டது.

அனுராதபுரம் ருவென்வெலிசாயவில் இன்று காலை 8.45 மணியளவில் மணி ஒலிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்காக விசேட அனுஷ்டானங்கள் முன்னெடுக்கப்பட்டன.

கண்டி தலதா மாளிகையிலும் நினைவேந்தல் நடைபெற்றது.

நீர்கொழும்பு பெரியமுல்ல ஜூம்மா பள்ளிவாசலில் ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து விசேட பிரார்த்தனைகள் இடம்பெற்றன.

பொகவந்தலாவை நகர் ஈழத்துப் பழனி ஶ்ரீ தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் இன்று காலை ஆத்மசாந்தி வழிபாடு நடத்தப்பட்டது.

கடந்த வருடம் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான கொழும்பு ஷங்ரிலா ஹோட்டல் வளாகத்தில் இன்று காலை உயிர் நீத்தவர்கள் நினைவுகூரப்பட்டனர்.

தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்ந்து யாழ். மாவட்டத்திலும் விசேட ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் அமைந்துள்ள சிற்றாலயத்தில் குரு முதல்வர் ஜெபரத்னம் அடிகளார் தலைமையில் திருப்பலிப் பூசை வழிபாடுகளும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.

மாத்தளை புனித தோமையார் ஆலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

முல்லைத்தீவில் அமைந்துள்ள மஹ்பூப் சுப்ஹானி பள்ளிவாசலில் விசேட பிரார்த்தனை இடம்பெற்றது. உயிரிழந்தவர்களுக்காக விசேட துஆ பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து இறக்காமம் ஜும்ஆ பள்ளிவாசலில் துஆ பிரார்த்தனை இடம்பெற்றது.

குண்டுத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் விசேட நிகழ்வு ஒன்றும் துஆ பிரார்த்தனையும் இன்று காலை 8.40 முதல் 8.55 வரை மதுரங்குளி-கணமூலை ஜூம்ஆ பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஏப்ரல் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் முகமாக ஹொரம்பாவ ஜாமியா ஜும்மா பள்ளிவாசலில் விசேட துஆ பிராத்தனையும் இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் இடம்பெற்றது.

தற்கொலைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு ஆத்ம சாந்தி வேண்டி முல்லைத்தீவிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவிலில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

வவுனியா குருமன்காடு பிள்ளையார் ஆலயத்திலும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நடைபெற்றது. வவுனியா அந்தணர் ஒன்றியம் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

ஏப்ரல் தாக்குதலில் உயிர் நீத்தவர்களின் ஆத்ம சாந்திக்காக விசேட யாக பூஜை ஹட்டன் செம்புகவத்தை தோட்டத்தில் அமைந்துள்ள அம்மன் ஆலயத்தில் இடம்பெற்றது.

அகில இலங்கை இந்து குருமார் ஒன்றியமும் மலையக மக்கள் முன்னணியும் இணைந்து இந்த யாக பூஜையை ஏற்பாடு செய்திருந்தன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்