by Staff Writer 20-04-2020 | 8:40 PM
Colombo (News 1st) பொதுத்தேர்தல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடி கலந்துரையாடியதுடன், பல துறையினர்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்துகொண்டது.
இன்று முற்பகல் 10.30 அளவில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கூடியது.
ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், ஆணைக்குழுவின் உறுப்பினர்களான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல், பேராசிரியர் நலின் அபேசேகர ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
அதன் பின்னர் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களாக செயற்படும் மாவட்ட அரசாங்க அதிபர்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னரே மாவட்ட அரசாங்க அதிபர்கள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சென்றிருந்தனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட சுகாதாரத்துறையின் தலைமை அதிகாரிகள், தபால் மா அதிபர் மற்றும் அரச அச்சகர் உள்ளிட்ட தரப்பினரும் இன்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினருடன் கலந்துரையாடினர்.
இதேவேளை, தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ டி சில்வா மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் இன்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சென்றிருந்தனர்.
நாளைய தினம் அனைத்து கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடுவது குறித்து ஆணைக்குழுவின் அதிகாரிகளிடம் கோரிக்கை முன்வைத்ததாக கலாநிதி ஹர்ஷ டி சில்வா இதன்போது குறிப்பிட்டார்.
அதற்கமைய, நாளை (21) காலை 10.30 அளவில் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.