வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் தொடரும்

COVID-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் - ஜனாதிபதி

by Staff Writer 19-04-2020 | 4:57 PM
Colombo (News 1st) ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் COVID-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் ஜனாதிபதி இந்த விடயம் தொடர்பில் பதிவிட்டுள்ளார். COVID-19 வைரஸை கட்டுப்படுத்துதல் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல், அரச கட்டமைப்பு, தனிநபர் பொருளாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னரே 4 வாரங்களாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தை தளர்த்த அரசாங்கம் தீர்மானித்ததாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் பொறுப்புடன் செயற்படுவது அனைவரினதும் கடமை என ஜனாதிபதி தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். சுகாதார தரப்பினரால் வழங்கப்படும் ஆலோசனைகள் மற்றும் அரசினால் பிறப்பிக்கப்பட்டுள்ள வரையறைகளை உரிய முறையில் பின்பற்றி இந்த சவாலை வெற்றிகொள்வதற்கு ஒத்துழைப்பை வழங்குமாறும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.