20 ஆம் திகதி முதல் அரச மற்றும் தனியார் துறையினரின் சேவைகளை மீள ஆரம்பிக்க தீர்மானம்

by Staff Writer 18-04-2020 | 2:57 PM
Colombo (News 1st) இடைநிறுத்தப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் துறையினரின் சேவைகளை மீள ஆரம்பிப்பதற்காக பொது போக்குவரத்து சேவை பயன்படுத்தப்படவுள்ளது. எதிர்வரும் 20 ஆம் திகதி தொடக்கம் அரச மற்றும் தனியார் துறையினரின் பணிகளை மீள ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 5000 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, 400 ரயில்களும் பொது போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் சுகாதார துறையினரின் ஆலோசனைகளுக்கு அமைய, பொது போக்குவரத்து சேவையை மீள ஆரம்பிக்குமாறு துறைசார் அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று (17) அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அத்தியாவசியத் தேவைக்காக மாத்திரம் பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்த போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் ரயில்வே திணைக்களம், இலங்கை போக்குவரத்து சபை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு உள்ளிட்ட போக்குவரத்து அதிகாரிகள் இணைந்து நேற்று நடாத்திய கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்தும் போது, சுகாதார மற்றும் பாதுகாப்பு துறையினரால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளைக் கடுமையாக அமுல்படுத்தவும் இந்த கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகளின் உடல் வெப்பநிலையை பரிசோதித்தல், எவரேனும் ஒருவருக்கு காய்ச்சல், தடிமன் காணப்பட்டால் சுகாதார துறையினரின் ஆலோசனைக்கு அமைய செயற்படவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ரயில் பெட்டிகள் மற்றும் மார்க்கங்களில் எச்சில் துப்புதல், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுதல், யாசகம் எடுத்தல் ஆகியனவும் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. ரயில் மற்றும் பஸ்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் முகக்கவசங்கள் அணிவதையும், ஒரு மீட்டர் இடைவௌியை பேணுவதையும் கட்டாயமாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள் , ரயில் பெட்டிகள் மற்றும் பஸ்களை இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை கிருமி தொற்று நீக்கம் செய்வதற்கும் இன்றைய கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.