சீனாவில் புதிதாக  27 பேருக்கு கொரோனா தொற்று

சீனாவில் புதிதாக 27 பேருக்கு கொரோனா தொற்று

by Bella Dalima 18-04-2020 | 5:07 PM
Colombo (News 1st) சீனாவில் நேற்றைய தினம் 27 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் 26 பேர் புதிதாகத் தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில், நேற்றைய தினம் இந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இன்று வௌியிடப்பட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாகத் தொற்றுக்குள்ளானவர்களில் 17 பேர் வௌிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்களெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனிடையே, சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 300 ஆல் அதிகரிக்கப்பட்டு, 82,719 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று தொடர்பான தரவுகளில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் காரணமாக இந்த அதிகரிப்புகள் பதிவாகி வருகின்றன. நேற்றைய தினம் தரவுகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் காரணமாக சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், தொற்று தொடர்பான உண்மையான எண்ணிக்கைகளை மூடி மறைக்கத் தாம் முயலவில்லை என சீன அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றை சீனா எவ்வாறு கையாண்டது என்பது தொடர்பில் விளக்கமளிக்க வேண்டுமென பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மெக்ரோன் வலியுறுத்தியுள்ளார். சீனாவில் என்ன நிகழ்ந்தது என்பதை அறியாத வகையில் விடயங்கள் நடந்தேறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.