மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று

மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 17-04-2020 | 6:11 PM
Colombo (News 1st) Update: 17/04/2020 : 6.10 PM: நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 242 ஆக அதிகரித்துள்ளது. இன்று (17) மாலை 4 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார். இன்று பதிவான நோயாளர்களில் மூவர் புனானை தனிமைப்படுத்தல் முகாமில் கண்காணிக்கப்பட்ட பெண்கள் என அவர் கூறியுள்ளார். இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த 7 பேர் இன்று குணமடைந்துள்ளனர். அதற்கமைய, குணமடைந்தோரின் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது. இந்தநிலையில், இன்று 530 மாதிரிகள் PCR சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை நாட்டில் 7 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர். 161 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. பேருவளை பகுதியில் 5 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். சீனகொட்டுவ, பன்னில, அக்கரகொட, அம்பேபிட்டிய மற்றும் கரந்தகொட ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை, கொழும்பு - கிரேண்ட்பாஸ் பகுதி, அருனாலோக மாவத்த, இம்மானுவேல் ஆரூஸ் மாவத்தை, நாகலகம் வீதி ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கம்பஹா மாவட்டத்தின் ஜா எல - சுதுவெல பகுதி தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கண்டி அக்குறணை பகுதியும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். புத்தளம், அட்டவில்லு கிராம மக்கள் சுயதனிமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், கடுமையான்குளம் கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அம்பாறை - அக்கரைப்பற்று 19 ஆம் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ---------------------------------------------------------------------------------------------------------------------------------- 17/04/2020 : 5.20 PM: மேலும் 3 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 241 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.