'கொரோனாவின் பின் தேர்தல் பற்றி சிந்திக்க வேண்டும்'

கொரோனா அச்சுறுத்தலை நீக்கியபின் தேர்தல் பற்றி சிந்திக்க வேண்டும் - C.V. விக்னேஸ்வரன்

by Staff Writer 17-04-2020 | 7:59 PM
Colombo (News 1st) கொரோனா ஆபத்தை நீக்கி இயன்றளவு விரைவாக சகஜநிலையை ஏற்படுத்திய பின்னரே தேர்தலைப் பற்றி சிந்திக்க வேண்டும் வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் C.V. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பாரளுமன்றத் தேர்தலை மே 23 ஆம் திகதி நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்திருப்பதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் விடுத்த அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மக்களின் வாழ்வுக்கும் உயிருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா அச்சுறுத்தலை முற்றாக நீக்குவதற்கு முன்பாக தேர்தலை நடத்தக்கூடாது எனவும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் C.V. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற பதவிகளோ, அரசியலோ தற்போது முக்கியமல்லவெனவும் மக்களின் பாதுகாப்பே முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் கட்சி சிறுபான்மையாக இருப்பதாலும் பெரும்பான்மை எதிர்க்கட்சியின் உட்பூசல் காரணமாகவும் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்ற அரசியல் காரணங்களே ஜனாதிபதியை வழிநடத்துகின்ற வகையில் காணப்படுவதாகவும் அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர அவசரமாக அரசியல் காரணங்களுக்காக தேர்தலை முன்னெடுத்தால் வாக்களிக்கும் மக்களின் தொகை வெகுவாகக் குறைவடைவதுடன் படையினரின் பங்கு தேர்தலின்போது பயங்கரமாக இயங்கும் எனவும் தேர்தல் முடிந்தாலும் அதன் சட்டவலு கேள்விக்குறியாகிவிடும் எனவும் C.V. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஒருவருக்கொருவர் தள்ளி நில்லுங்கள் என மக்களுக்கு இதுகாறும் கூறிய அரசாங்கம் வாக்காளர்களை ஆறடி தூரத்தில் இராணுவத்தை கொண்டு நிறுத்தப்போகின்றதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், தேர்தலின் பின்னரான பாராளுமன்ற வெற்றியையும் கொரோனா வைரசின் அதியுச்ச பெருக்கத்தையும் ஒரே தருணத்தில் முகம்கொடுக்க அரசாங்கம் ஆயத்தமாகின்றதா எனவும் C.V. விக்னேஸ்வரனின் அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.