அரசின் விசேட கொடுப்பனவான 5000 ரூபா பெற தகுதியானோர்

அரசாங்கம் அறிமுகப்படுத்தும் விசேட கொடுப்பனவு - 5000 ரூபா பெற தகுதியானவர்கள் விபரம் இதோ...

by Fazlullah Mubarak 17-04-2020 | 11:25 AM

நாளாந்த வாழ்வாதாரத்தை இழந்து சிரமத்திற்கு உள்ளாகியுள்ளவர்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு விசேட கொடுப்பனவு ஒன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்றும் நாளையும் இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது. இவ்வாறு தெரிவுசெய்யப்படுவோருக்கு, எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் தலா 5,000 ரூபா வீதம் வழங்கப்படவுள்ளதாக சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி குறிப்பிட்டுள்ளார். சமூக நலன் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த செயற்பாடு மேற்கொள்ளப்படவுள்ளது. மத்திய அரசு, உள்ளூராட்சி நிறுவனங்கள் உள்ளிட்ட அரச அலுவலகங்களினால் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு இந்த நிதி வழங்கப்படவுள்ளது. அதற்கமைய முன்பள்ளி ஆசிரியர்கள், தனியார் பஸ் சாரதிகள், நடத்துநர்கள், ஆயுர்வேத வைத்தியர்கள், வருமானத்தை இழந்துள்ள சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள், தொழிலை இழந்துள்ள பெண் த​லைமைத்துவ குடும்பங்கள், ஊடகவியலாளர்கள் என பலர் இந்தத் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர். ஏனைய சிறு கைதொழில் துறையை சார்ந்தவர்கள் மற்றும் கட்டட நிர்மாணத்துறைக்கான சேவை வழங்குநர்கள் ஆகியோருக்கும் 5,000 ரூபா நிதி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.