by Staff Writer 16-04-2020 | 8:25 PM
Colombo (News 1st) Covid-19 நிதி பயன்பாடு தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று (16) ஏற்பாடு செய்திருந்ததுடன், பசில் ராஜபக்ஸ இன்று வௌிநாட்டுத் தூதுவர்களை சந்தித்தார்.
இதேவேளை, அலிபாபா குழுமத்தின் ஸ்தாபகரின் அன்பளிப்பை இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஏற்றுக்கொண்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று பிற்பகல் தனது டுவிட்டர் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.
Covid-19 ஐ கட்டுப்படுத்துவதற்கு எடுக்கும் நடவடிக்கைகளைப் போன்று பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான செயற்பாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, Covid-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தை செயற்படுத்துவதற்கான முகாமைத்துவ குழு இன்று ஜனாதிபதி செயலகத்தில் கூடியது.
நிதியத்தை ஸ்தாபித்தமைக்கான நோக்கத்தை அடைந்துகொள்வதற்கு எதிர்வரும் நாட்களில் எடுக்கவேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ. டி லக்ஷ்மன் இந்த குழுவின் தலைவராக செயற்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் நிதி விவகாரம் தொடர்பிலான பிரதம அதிகாரி ரவீந்திர ஜே விமலசிறி செயலாளராக செயற்படுகின்றார்.
கொரோன ஒழிப்புக்கு தேவையான மருந்துகள், மருத்துவ உபகணரங்கள் உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு சேவைக்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்வது இந் நிதியத்தின் பிரதான நோக்கமாகும்.
அத்துடன் சுகாதாரம் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு இந் நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
சிறுவர்கள், பெண்கள், குறைந்த வருமானம் பெறுவோர், முதியவர்கள், அங்கவீனமடைந்தவர்கள் மற்றும் விசேட கவனம் செலுத்தவேண்டியவர்களின் தேவைகளை பூர்த்திசெய்வதும் இதன் நோக்கமாகும்.
தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்கு பொது சுகாதார கட்டமைப்பு, கிராமிய மருந்தகங்கள், பரிசோதனை நிலையங்கள், சிகிச்சை நிலையங்கள் மற்றும் சுகாதார சேவை கட்டமைப்பை ஒன்றிணைப்பதற்கும் இந் நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
நாட்டின் மருத்துவ மற்றும் விஞ்ஞானபூர்வ அறிவையும் அனுபவத்தையும் பயன்படுத்தி பாதுகாப்பு அங்கிகளை சர்வதேச சந்தைக்கு விநியோகிப்பதை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
ஊடகங்கள் மற்றும் கல்வி நிகழ்ச்சிகள் மூலம் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மேம்படுத்துவதும் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட இலங்கையின் பிரதான அபிவிருத்தி குழுமத்தையும் முகவர் நிறுவனங்களையும் இணைத்து நிதியை திரட்டி ஒருங்கிணைப்பது இந்த நிதியத்திற்கு வழங்கப்பட்டுள்ள மற்றைய பொறுப்பாகும்.