வௌிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களின் வேண்டுகோள்

வௌிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களின் வேண்டுகோள்

வௌிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களின் வேண்டுகோள்

எழுத்தாளர் Staff Writer

14 Apr, 2020 | 8:17 pm

Colombo (News 1st) இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்கள், தாம் இலங்கை திரும்புவதற்கு வழிசெய்யுமாறு அரசாங்கத்தை கோரியுள்ளனர்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் விமானம் தரையிறக்கப்படுவது கடந்த மார்ச் 19 ஆம் திகதி நிறுத்தப்பட்டது.

கொரோனா வைரஸ் நாட்டுக்குள் பரவுவது தடுக்கப்படும் வரை இருக்கும் இடங்களில் பாதுகாப்பாக இருங்கள் என இலங்கை திரும்பும் எதிர்பார்ப்பில் வௌிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களிடம் கடந்த 27 ஆம் திகதி அரசாங்கம் கோரிக்கை விடுத்தது.

எனினும், கொரோனா தடுப்புக்காக முன்னெடுக்கப்பட்ட வழிமுறைகளால் இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்கள் கடும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட இந்தத் தரப்பினர் உடனடியாக தாம் இலங்கை திரும்புவதற்கு வழிசெய்யுமாறு அரசாங்கத்தை கோரியுள்ளனர்.

இலங்கை மாணவர்கள் 600 பேர் நாடு திரும்ப முடியாமல் இந்தியாவில் தங்கியுள்ளனர்.

அவர்கள் பஞ்சாப், பெங்களூர் உட்பட 12 பல்கலைக்கழகங்களில் கல்வியை தொடர்ந்தவர்களாவர்.

இந்தியாவில் 358 கொரோனா மரணங்கள் பதிவான பின்புலத்தில் தம்மை இலங்கைக்கு திருப்பி அழைக்கும்படி இந்த மாணவர்கள் இலங்கை அரசாங்கத்தை கோரியுள்ளனர்.

இதேவேளை, நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இந்தியாவின் பஞ்சாப் லோவிலி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

தமது பல்கலைக்கழகத்தின் கல்விபயிலும் சுமார் 100 இலங்கை மாணவர்களுக்காக தேவையானால் விமானப் பயணச்சீட்டை கொள்வனவு செய்வதற்கு பல்கலைக்கழகத்தினால் நிதி உதவி அளிக்க முடியும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த மாணவர்கள் அருகிலுள்ள விமான நிலையத்துக்கு பயணிப்பதற்காக வாகனப் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க முடியும் என்றும் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் உபவேந்தர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் சுமார் 40 மாணவர்கள் வரை கல்வி பயில்வதாக பாகிஸ்தானின் பதில் உயர்ஸ்தானிகர் நாம் வினவிய போது கூறினார்.

அவர்களை இலங்கைக்கு அனுப்பும் நாள் குறித்து தாம் தௌிவுபடுத்தப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு திரும்பும் எதிர்பார்ப்பிலுள்ள இலங்கையர்களுக்கு விசேட விமானத்துக்கான அனுமதியை வழங்குமாறு பங்களாதேஷில் தங்கியுள்ள இலங்கை மாணவர்களும் தொழிலாளர்களும் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்