ரஞ்சன் ராமநாயக்கவிற்கு விளக்கமறியல்

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு விளக்கமறியல்

by Staff Writer 14-04-2020 | 2:37 PM
Colombo (News 1st) கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கங்கொடவில பிரதம நீதவான் மொஹமட் மிஹால் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரஞ்சன் ராமநாயக்க சார்பில் ஆஜரான ஆஷா கஹவத்த உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு, ஏதேனுமொரு பிணை நிபந்தனையின் அடிப்படையில் அவரை விடுவிக்குமாறு கோரியுள்ளனர். எனினும், அது தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் இதுவரை நிறைவடையாதமையால், விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படக்கூடும் என மிரிஹான பொலிஸார் விளக்கமளித்துள்ளனர். பொலிஸாரின் கருத்துக்களை ஆராய்ந்த பிரதம நீதவான், பிணை கோரிக்கையினை நிராகரித்துள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருடன் கைது செய்யப்பட்ட மற்றைய நபர், ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் குறித்த நபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார். மாதிவெலவில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான குடியிருப்பு தொகுதியிலுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டிற்கு கெப் ஒன்றில் ஒருவர் வருகை தந்துள்ளார். ஊரடங்கு சட்டத்தை மீறி பயணித்துள்ள குறித்த நபர், ரஞ்சன் ராமநாயக்கவை சந்திக்க வேண்டும் என குடியிருப்பு தொகுதியில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரியிடம் கூறியுள்ளார். எனினும் அவரிடம் ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரமில்லாதமை குறித்து பொலிஸார் வினவியுள்ளனர். இதன்போது அந்த பகுதிக்கு வந்த ரஞ்சன் ராமநாயக்க, பொலிஸ் அதிகாரியை மீறி குறித்த நபரை தமது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில், ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டிற்கு வருகைதந்த நபரும் ஊரடங்கு சட்டத்தை மீறுவதற்கு உடந்தையாக செயற்பட்ட குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்கவும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.