மரக்கறிகளை கொள்வனவு செய்ய அரசு தீர்மானம்

மரக்கறிகளை கொள்வனவு செய்ய அரசு தீர்மானம்

by Staff Writer 11-04-2020 | 3:39 PM
Colombo (News 1st) விவசாயிகளிடமிருந்து மரக்கறிகளைக் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனபடிப்படையில், நுவரெலியா மற்றும் தம்புள்ளை விவசாயிகளிடமிருந்து மரக்கறிகளை கொள்வனவு செய்யவுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது. இதற்காக நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்ட செயலாளர்களுக்கு 350 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது. இன்று (11) தம்புள்ளை மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் இருந்து மரக்கறிகளை கொள்வனவு செய்வதாக ஜனாதிபதி செயலணி கூறியுள்ளது. விவசாயிகள் வசமுள்ள அனைத்து மரக்கறிகளும் இந்தத் திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்படவுள்ளன. தம்புள்ளை பகுதியில் 25 முதல் 30 இலட்சம் கிலோகிராம் மரக்கறிகளையும் நுவரெலியா மாவட்டத்தில் இருந்து 3 முதல் 5 இலட்சம் கிலோகிராம் மரக்கறிகளையும் கொள்வனவு செய்ய எதிர்பார்ப்பதாக அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது. இந்த மரக்கறிகளை இராணுவத்தினர், மாவட்ட செயலாளர்களின் வழிகாட்டலின் கீழ் அந்தந்த பகுதி மக்களுக்கு விநியோகிக்கவுள்ளதாகவும் செயலணி குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, நடமாடும் வாகனங்களின் மூலம் மரக்கறிகளை விநியோகிக்கும் வர்த்தகர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்குமாறு பொலிஸார் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு ஜனாதிபதி செயலணி அறிவுறுத்தியுள்ளது. வர்த்தகர்கள் தவிர்ந்தோர் இந்த நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.