ஜா-எலயில் பகுதியில் பலத்த பாதுகாப்பு

ஜா - எலயில் கொரோனா நோயாளர்கள் அறுவர் அடையாளம் காணப்பட்டனர்

by Staff Writer 11-04-2020 | 8:19 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் ஜாஎல - சுதுவெல்ல பகுதியில் அடையாளம் காணப்பட்டதை அடுத்து குறித்த பகுதிக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தொற்றுக்குள்ளான பல நபர்கள் மதுவுக்கு அடிமையானவர்கள் என்பதால் அவர்கள் பெரும்பாலானோருடன் தொடர்புபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுவுக்கு அடிமையானவர்கள் என்பதால் அவர்களை கட்டுப்படுத்துவது கடினம். முதலாம் நபரின் மனைவிக்கும் 7 மாத குழந்தைக்கும் தொற்று உள்ளது. அவர்களை IDH வைத்தியசாலைக்கு அனுப்புயுள்ளதாக ஜா-எல பொது சுகாதார பரிசோதகர் K.A. அனுர அபேரத்ன கூறியுள்ளார். ஜாஎல - சுதுவெல்ல பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் இதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்டதுடன் அவருடன் தொடர்பை பேணிய சிலர் சுயதனிமைக்குட்படுமாறு அறிவுறுத்தப்பட்டனர். எனினும், அவர்கள் அதனை பின்பற்றாமல் பொலிஸாரை தவிர்த்து வந்ததன் காரணமாக சோதனை நடவடிக்கையின் மூலம் 28 பேர் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர் அவர்கள் கடற்படைக்கு சொந்தமான ஒலுவில் பகுதியில் அமைந்துள்ள மத்திய நிலையத்துக்கு அனுப்பப்பட்டதுடன் அவர்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக நேற்று உறுதிப்படுத்தப்பட்டது. சுதுவெல்ல ஸ்வர்ன ஹங்சவில பகுதியில் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட நபர் மருதானையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த நபருடன் தொடர்புபட்டவர் என சுகாதாரப் பிரிவு கூறியது. தொற்றுக்குள்ளானவர்கள் என நேற்று கண்டறியப்பட்ட 6 பேரும் சுதுவெல்ல பகுதியைச் சேர்ந்தவரின் நெருங்கிய நண்பர்கள் என்பதுடன் அந்தப் பகுதியில் சுமார் 6000 பேர் வாழ்கின்றனர். இதேவேளை, ஜா-எல பாரிஸ் பெரேரா மாவத்தையில் வசிக்கும் சுமார் 40 பேர் ஜா - எல மைதானத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. இவர்கள் சுதுவெல்லவில் பதிவான முதலாவது கொரோனா தொற்றாளருடன் தொடர்புபட்டிருப்பதாக அனுமானிக்கப்பட்டுள்ளது. நோய் அறிகுறிகள் தென்படும் பொது சுகாதார பரிசோதகர்கள் மூவரின் மாதிரிகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முதலாவது நோயாளி பலருடன் தொடர்புபட்டுள்ளார். ஜா-எல பகுதியில் ஒரு குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது போன்ற ஒன்று இடம்பெற்றுள்ளது. சுதுவெல்ல கிராமத்தவர்களின் செயற்பாடுகள் பிரகாரம் பொதுவான தனிமைப்படுத்தல் மாத்திரம் போதாது என ஜா-எல சுகாதார வைத்திய அதிகாரி, வைத்தியர் நிஷாந்த விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.