நிர்க்கதியான நிலையில் ஆயிரக்கணக்கான சிறார்கள்

இந்தியாவில் நிர்க்கதியான நிலையில் ஆயிரக்கணக்கான சிறார்கள்

by Chandrasekaram Chandravadani 11-04-2020 | 4:58 PM
Colombo (News 1st) இந்தியாவில் திடீரென பிறப்பிக்கப்பட்ட 21 நாட்கள் ஊரடங்கு சட்டத்தினால் 10,000 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் உணவுத்தேவையை எதிர்நோக்கியுள்ளனர். இந்தியாவில் 472 மில்லியன் சிறுவர்கள் வாழ்வதுடன், இந்தியா அதிகளவு சிறுவர்களை கொண்ட நாடாக காணப்படுகின்றது. இந்தியாவில் சுமார் 40 மில்லியன் சிறுவர்கள், வறுமைக்கோட்டின் கீழுள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் பல நகரங்களிலும் சிறுவர்கள் வீதிகளில் பேனை மற்றும் பலூன்களை விற்பனை செய்பவர்களாக உள்ள நிலையில் இந்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவினால் அவர்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். டில்லியில் மட்டும் 70,000 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் இவ்வாறு வீதிகளில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், 24 மணித்தியாலங்களும் இயங்கக்கூடிய வகையில் சிறுவர்களுக்காக துரித தொலைபேசி சேவையை இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24ஆம் திகதி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் 718 மாவட்டங்களிலும் 128 ரயில்வே நிலையங்களிலும் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அறிவிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படையில், சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் , அவர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் காணாமல் போகின்றமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் நாளொன்றில் மாத்திரம் ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.