சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஒத்துழைப்பு

அரிசி ஆலை நடவடிக்கைகளுக்கு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஒத்துழைப்பு

by Staff Writer 11-04-2020 | 3:17 PM
Colombo (News 1st) அரிசி ஆலைகளின் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஒத்துழைப்பை பெறுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரிசி ஆலை உரிமையாளர்களின் சேவையும் மறு அறிவித்தல் வரை Covid-19 அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அரிசி ஆலை உரிமையாளர்களை தமது தேவைகள் தொடர்பில் மாவட்ட செயலாளர்களுக்கு அல்லது நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவிக்குமாறு அத்தியாவசிய சேவைகளுக்கான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து ஆராயுமாறு அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவருக்கும் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி செயலணி குறிப்பிட்டுள்ளது. அத்தியாவசிய உணவு வழங்கல், நெல் உற்பத்தி, களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோகம், உணவு பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிசெய்வதற்காக அனைத்து அரிசி ஆலைகளின் சேவைகளும் அத்தியாவசிய சேவையாக நேற்று பிரகடனப்படுத்தப்பட்டது.