முடக்கப்பட்டுள்ள மன்னார் - தாராபுரம் கிராமத்தில் கிருமி நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு

by Staff Writer 10-04-2020 | 7:33 PM
 Colombo (News 1st) கொரோனா தொற்று சந்தேகத்தில் முழுமையாக முடக்கப்பட்டுள்ள மன்னார் - தாராபுரம் கிராமத்தில் கிருமி நீக்கும் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன. மன்னார் - தாராபுரம் கிராமம் கடந்த 8 ஆம் திகதி முழுமையாக முடக்கப்பட்டது. அங்கு 464 குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில், இரண்டு குடும்பங்கள் புத்தளத்தில் இருந்து வந்த கொரோனா தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பை பேணியதால் அந்தப் பகுதி முற்றாக முடக்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குறித்த இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 9 பேரிடம் இன்று காலை 7.00.மணியளவில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் வினோதன் சம்பந்தப்பட்ட இரண்டு குடும்பங்களின் வீடுகளுக்கும் சென்று பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதேவேளை, இத்தருணத்தில் சுகாதார பணியாளர்கள் கிருமி நீக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். தாராபுரம் கிராமத்தின் பொது இடங்களிலும் கிருமி நீக்கும் நீர் தெளிக்கப்பட்டது. பரிசோதனை மாதிரிகள் மன்னார் பிராந்திய சுகாதார பணிப்பாளரால் நேரடியாக யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதிக்கப்படவுள்ளன.