பொருளாதார நிலையங்களை மூடியதால் விவசாயிகள் பாதிப்பு

பொருளாதார மத்திய நிலையங்கள் மூடப்பட்டதால் விவசாயிகள் கடும் பாதிப்பு

by Staff Writer 10-04-2020 | 8:24 PM
Colombo (News 1st) மரக்கறிகளை கொள்வனவு செய்து, விநியோகிக்கும் பிரதான பொருளாதார மத்திய நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் தற்போது பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன. தம்புளை விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு ஒரு நாளைக்கு 2000 முதல் 2500 மெட்ரிக் தொன் மரக்கறி கொண்டுவரப்படுவது வழமையாகும். எனினும், தம்புளை பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டதை அடுத்து, நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தம்புளை - கம்உதாவ விளையாட்டு மைதானம் , கெக்கிராவ - தம்புளை பிரதான வீதியின் தனியார் காணிகளில் இருந்து அவர்கள் குறைந்த விலைகளுக்கு மரக்கறிகளை விற்பனை செய்தனர். மரக்கறி விற்பனையின் போது சுகாதார படிமுறைகளை பின்பற்ற வேண்டிய போதிலும் பல சந்தர்ப்பங்களில் அதனைக் காண முடியவில்லை. தம்புளை விசேட பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டாலும் அதன் செயற்பாட்டு பகுதியில் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறுவதைக் காணமுடிந்தது. நாடளாவிய ரீதியில் நிலவும் கேள்விக்கு அமைய மரக்கறி விநியோகத்திற்காக இந்தப் பகுதி செயற்படுகின்றது. இதேவேளை, கெப்பட்டிப்பொல பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டு இன்றுடன் நான்கு நாட்களாகின்றன. இதன் காரணமாக வெலிமடை, ஊவா பரணகம, பண்டாரவளை உள்ளிட்ட பகுதிகளின் விவசாயிகள் தாம் வசிக்கும் நகரங்களை அண்மித்த பிரதான வீதிகளில் மரக்கறிகளை விற்பனை செய்தனர். தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டு இன்றுடன் இரண்டு நாட்களாகின்றன. அந்த மத்திய நிலையத்திற்கு மரக்கறிகளை கொண்டுவரும் விவசாயிகளும் அவற்றை கொள்வனவு செய்யும் வியாபாரிகளும் போக்குவரத்திற்கான அனுமதிப் பத்திரத்தை பெற முடியாததால் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களின் இந்த நிலைமை குறித்து ஆராய்ந்து பார்ப்பதற்காக சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இன்று அப்பகுதிக்கு விஜயம் செய்தார். கல்பிட்டி தீபகற்பம், நுரைச்சோலை பொருளாதார மத்திய நிலையத்திற்குள் பிரவேசிப்போருக்கு நாளை முதல் வரையறைகளை விதிப்பதற்கு கல்பிட்டி பிரதேச சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் பிரகாரம் கல்பிட்டி தீபகற்பம், நுரைச்சோலை பொருளாதார மத்திய நிலையத்திற்குள் பிரவேசிக்கும் வாகனங்கள் கிருமி நீக்கம் செய்யப்படவுள்ளன. நுரைச்சோலை பொருளாதார மத்திய நிலையத்திற்குள் பிரவேசிக்கும் விவசாயிகளும் வியாபாரிகளும் தங்களின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக நேர அட்டவணையை அறிமுகப்படுத்த கல்பிட்டி பிரதேச சபை தீர்மானித்துள்ளது. விவசாயிகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை இந்த பொருளாதார மத்திய நிலையத்திற்குள் பிரவேசிக்க முடியும் என்பதுடன் வியாபாரிகளுக்கு காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.