19 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்

19 மாவட்டங்களில் மாலை 4 மணியில் இருந்து மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்

by Staff Writer 09-04-2020 | 4:04 PM
Colombo (News 1st) ஊரடங்கு தளர்த்தப்பட்ட மாவட்டங்களில் மாலை 4 மணியில் இருந்து மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் 19 மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டது. குறித்த மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி தொடக்கம் எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 6 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல பொலிஸ் பிரிவில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இரத்தினபுரி மற்றும் பெல்மடுல்ல பொலிஸ் பிரிவுகளில் நேற்றிரவு தொடக்கம் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்த பகுதிகளுக்குள் பிரவேசிப்பதற்கும் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டார். இதேவேளை, மக்களின் நலன் கருதி ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால், பொறுப்புடன் செயற்படுமாறு பொதுமக்களிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்தியாவசிய சேவை தவிர்ந்த வேறு விடயங்களுக்காக மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளை செயற்றிறனுடன் முன்னெடுப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடைமுறைகளைத் தவறாகக் கையாள்வோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலத்தில் மக்கள் தமக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை வீட்டிலிருந்தே கொள்வனவு செய்வதற்கு ஏதுவாக அரசாங்கம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. எந்த மாவட்டத்தை சேர்ந்தவராக இருப்பினும், விவசாய நடவடிக்கையிலும் சிறு தேயிலைத் தோட்டம் மற்றும் ஏற்றுமதி பயிர் துறையிலும் ஈடுபடுவதற்கான அனுமதி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மக்களின் நலனைக் கருத்திற்கொண்டே கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால், அந்த நடவடிக்கைகளையும் ஆலோசனைகளையும் பொறுப்புடன் பின்பற்றுமாறு அரசாங்கம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதேவேளை, ஊரடங்கு அனுமதிப்பத்திரமின்றி வீதிகளில் நடமாடுவோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தனிமைப்படுத்தல் விதிமுறைகள் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்படும் வாகனங்கள் தொற்று நிலைமை வழமைக்கு திரும்பும் வரை தடுத்து வைக்கப்பட்டிருக்கும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இதேவேளை, புது வருட கால கொண்டாட்டங்களை குடும்பத்தினருடன் மாத்திரம் மட்டுப்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்