பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டுமா, இல்லையா?

பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டுமா, இல்லையா?

எழுத்தாளர் Bella Dalima

09 Apr, 2020 | 8:18 pm

Colombo (News 1st) நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டுமா, இல்லையா என்பது தொடர்பில் தற்போது அதிகம் பேசப்படுகிறது.

MANTHRI.LK-யால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமூக வலைத்தள கலந்துரையாடலில் இது தொடர்பில் கட்சிகளின் பிரதிநிதிகள் கருத்துத் தெரிவித்தனர்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கும் போது, இத்தகைய நெருக்கடி சூழலில் அதனை மீளக் கூட்டுவது தொடர்பில் அரசியலமைப்பில் உரிய ஏற்பாடுகள் உள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தைக் கூட்டுவதாக இருந்தால், பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கட்டளைகளுக்கு அனுமதியைப் பெறும் வகையில், நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு பாராளுமன்றம் கலைக்கப்பட்ட காலப் பகுதியில் பாராளுமன்றத்தை மீளக் கூட்டுவதற்கான அதிகாரங்கள் உள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி, கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

இது சுகாதாரம் சார்ந்த பிரச்சினை என்பதால், மக்களின் கருத்துக்களுக்கு செவிமடுப்பதற்காக அனைத்து கட்சித் தலைவர்கள், பிரதிநிதிகள் அழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ கூறும் விடயங்களுக்கு அமைய, 105/4 சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பொது அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டால், அதனை அங்கீகரிப்பதற்காக 10 நாட்களுக்குள் உடனடியாக பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டும். அத்தோடு, அரசியலமைப்பின் 70 ஆவது சரத்தின் 7 ஆவது உப பிரிவில் இத்தகைய விசேட சந்தர்ப்பங்களில் செயற்பட வேண்டிய விதம் குறிப்பிடப்பட்டுள்ளது என எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அவசர நிலை தற்போது எழவில்லை. ஆகையால், தேவையெனில் சட்ட ரீதியான அறிவித்தல் மூலம் பாராளுமன்றத்தைக் கூட்ட முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்