பொருளாதார பாதிப்பை குறைக்க பீடாதிபதிகள் பரிந்துரை

COVID-19 ஆல் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பைக் குறைக்க மருத்துவ பீட பீடாதிபதிகள் முன்வைத்துள்ள பரிந்துரைகள்

by Bella Dalima 08-04-2020 | 8:17 PM
Colombo (News 1st) COVID-19 வைரஸ் தொற்று காரணமாக நாடு மற்றும் பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்காக ஆறு பல்கலைக்கழகங்களின் மருத்துவ பீட பீடாதிபதிகள் பிரேரணைகள் சிலவற்றை முன்வைத்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மற்றும் COVID-19 பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோரிடம் கடந்த 5 ஆம் திகதி இந்த பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. களனி மருத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஜனக டி சில்வா, ருஹுணு மருத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சரத் லேகம்வசம், பேராதனை மருத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எஸ்.ஏ.எம்.குலரத்ன, ரஜரட்ட மருத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சிசிர சிறிபத்தன, கொழும்பு மருத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சரோஜ் ஜயசிங்க, ஶ்ரீ ஜயவர்தனபுர மருத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கமணி வனிகசூரிய ஆகியோர் இந்த பிரேரணைகளை முன்வைத்துள்ளனர். அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பாராட்டியுள்ள பேராசிரியர்கள், வௌிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வரும் நோய் தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்கு சுகாதார தரப்பினரும் பாதுகாப்பு தரப்பினரும் எடுத்துள்ள நடவடிக்கைகள் வெற்றியளித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர். எனினும், தற்போதைய நிலைமை மக்களுக்கும் தொழிற்துறைகளுக்கும் பாதிப்பாக அமைந்துள்ளதால், இலங்கை இந்த நிலையில் இருந்து விடுபட வேண்டும் என்பதே அவர்களது நிலைப்பாடாகும். பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதுடன், நாட்டின் சனத்தொகையில் 10 வீதமாக உள்ள 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் சிகிச்சைபெறுவதிலும் அசௌகரியம் ஏற்பட்டுள்ளது. இந்த குறைபாடுகளை தவிர்ப்பதற்காக அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையிலும் அசௌகரியம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ பீடங்களின் பீடாதிபதிகள் தெரிவித்துள்ளனர். பொருளாதாரத்துறையை நோக்குமிடத்து, ஆடை உற்பத்தி தொழிற்துறைக்கு மாத்திரம் இரண்டு பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டும் அவர்கள், கூலித்தொழில் செய்வோரும் நிர்க்கதியாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினால் சமூகத்தில் ஒருவித அச்சம் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் வதந்திகள் பல பரவியுள்ளதாகவும் பேராசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இத்தகைய வதந்திகள் காரணமாக காய்ச்சல், இருமல் போன்ற நோய் அறிகுறியுள்ள நோயாளர்களுக்கேனும் சிகிச்சையளிக்க சுகாதார தரப்பினர் அஞ்சுவதாக மருத்துவ பீடங்களின் பீடாதிபதிகள் தெரிவித்துள்ளனர். உலக நாடுகளில் அதிக வேகமாக நோய் பரவினாலும் இலங்கையின் நிலைமையை கருத்திற்கொள்ளும்போது, விரைவில் ஊரடங்கு நிலைமையில் இருந்து விடுபட முடியும் என்பதே அவர்களது நிலைப்பாடாகும். இந்த தீர்மானங்களை எடுக்கும்போது அனைத்து அறிவியல் விடயங்கள் மற்றும் காரணிகள் குறித்து கவனம் செலுத்தி சீனா, தென் கொரியா, வியட்நாம், சிங்கப்பூர் போன்ற நாடுகள் பின்பற்றிய நடைமுறைகள் குறித்து பரிசீலிக்க வேண்டும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நோய் பரவும் தன்மை குறைந்திருந்தால், கட்டம் கட்டமாக ஒவ்வொரு மாவட்டமாக ஊரடங்கு சட்டத்தை தளர்த்த முடியும் என்ற பிரேரணையை 6 பேராசிரியர்களும் முன்வைத்துள்ளனர். அதிகளவிலான நோய் தொற்றாளர்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற பகுதிகளை தனிமைப்படுத்த முடியும் எனவும் அவர்களது கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலைகள், பல்பொருள் அங்காடிகள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் மருந்தகங்களை குறிப்பிட்ட நேரத்திற்கு திறந்து வைக்குமாறு பிரேரித்துள்ள பேராசிரியர்கள், அனைத்து வீடுகளுக்கும் இந்த சேவைகளை பெற்றுக்கொள்வதற்கான அனுமதிப்பத்திர நடைமுறையொன்று தொடர்பிலும் ஆலோசனை வழங்கியுள்ளனர். கொரோனா நோய் பரிசோதனைகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவிக்கும் பேராசிரியர்கள் நிபுணத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பதால் ஏற்படக்கூடிய அசௌகரியத்தை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்கூட்டியே எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறித்த காலப்பகுதிக்குள் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்காவிட்டால் அதிகாரிகள், தற்போதைய தடைகளை இலகுபடுத்த முடியும் என பேராசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். சமூக ஊடகங்கள் மற்றும் முக்கிய ஊடங்கள் சில ஒற்றுமையைக் குலைக்கும் வகையிலான தகவல்களை பரப்புவதால் சிலர் நோய் அறிகுறிகளை மறைப்பதற்கு முயற்சிக்கும் அபாயம் உள்ளதாகவும் மருத்துவ பீடங்களின் பீடாதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.