ஊரடங்கு அனுமதிப்பத்திரம் குறித்த முக்கிய அறிவிப்பு

தொழில் அடையாள அட்டைகளை ஊரடங்கு அனுமதிப் பத்திரமாக பயன்படுத்த முடியும்

by Staff Writer 08-04-2020 | 10:19 AM
Colombo (News 1st) அரச மற்றும் தனியார் துறையினர் அத்தியாவசிய தேவைக்கான ஊரடங்கு கால அனுமதிப்பத்திரமாக தமது நிறுவன அடையாள அட்டைகளை பயன்படுத்துவதற்கான கால அவகாசம் இம்மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. தமது தொழிலுக்கான அடையாள அட்டையை பயன்படுத்துவதற்கு எதிர்வரும் 10 ஆம் திகதி வரை ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டிருந்து. இந்த கால அவகாசம் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. 43 நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தமது நிறுவன அடையாள அட்டையை , ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், தூதுவராலய உத்தியோகஸ்தர்கள், நிதி, சுகாதார, பாதுகாப்பு, விவசாய அமைச்சுகளின் ஊழியர்கள், இலங்கை மத்திய வங்கி, சிவில் பாதுகாப்பு பிரிவு, குடிவரவு, குடியகல்வு திணைக்களம், ரயில், சிறைச்சாலைகள், தபால், தீயணைப்பு ஆகிய திணைக்களங்களின் ஊழியர்களும் தமது தொழில் அடையாள அட்டையை பயன்படுத்த முடியும். மாவட்ட செயலக அதிகாரிகள், சுங்கத் திணைக்களம், இலங்கை விமான சேவை நிறுவன அதிகாரிகள், டெலிகொம், அரச அச்சகம், இலங்கை எரிபொருள் கூட்டுதாபன ஊழியர்கள், கூட்டுறவு, மொத்த விற்பனையாளர்கள் சங்கம், மின்சார சபை ஊழியர்கள், தனியார் தொலைத்தொடர்பாடல் நிறுவனங்கள், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்களும் தமது தொழில் அடையாள அட்டையை ஊரடங்கு சட்டத்தின்போது அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியும். ஊடக நிறுவனங்கள், அரச மற்றும் தனியார் வங்கிகள், வைத்தியசாலைகள் ஆகிய நிறுவனங்களில் தொழில் புரிவோருக்கும் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.