ஸ்பெயினில் 24 மணி நேரத்தில் 757 பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்று: ஸ்பெயினில் 24 மணி நேரத்தில் 757 பேர் உயிரிழப்பு

by Bella Dalima 08-04-2020 | 5:29 PM
Colombo (News 1st) ஸ்பெயினில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கொண்ட நாடாக அமெரிக்காவிற்கு அடுத்தபடியாகவும், நோய்த்தொற்றால் அதிகம் பலியானோர் எண்ணிக்கை கொண்ட நாடாக இத்தாலிக்கு அடுத்தபடியாகவும் ஸ்பெயின் உள்ளது. அங்கு கடந்த வியாழக்கிழமை ஒரே நாளில் 950 பேர் பலியாகினர். அதன் பிறகான நாட்களில் பலி எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியது. தொடர்ந்து 4 நாட்களாக குறைந்து வந்த பலி எண்ணிக்கை நேற்று மீண்டும் உயரத் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 24 மணி நேரத்தில் 743 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இன்றைய நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 757 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,555 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,180 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,46,690 ஆக உயர்வடைந்துள்ளது.