இறுதி சடங்கில் பங்கேற்றவருக்கு கொரோனா தொற்று: மன்னாரில் சில குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

இறுதி சடங்கில் பங்கேற்றவருக்கு கொரோனா தொற்று: மன்னாரில் சில குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

எழுத்தாளர் Bella Dalima

08 Apr, 2020 | 7:50 pm

Colombo (News 1st) மன்னார் – தாராபுரம் பகுதியில் உள்ள சில குடும்பங்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தாராபுரத்தில் உள்ள சில குடும்பங்கள் நேற்று பிற்பகல் முதல் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

புத்தளத்தை சேர்ந்த ஒருவர் கடந்த மாதம் 18 ஆம் திகதி தாராபுரத்தில் ஒருவரின் இறுதி சடங்கில் பங்குபற்றியிருந்தார்.

குறித்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்நபர் கடந்த 17 ஆம் திகதி இந்தோனேஷியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இந்நிலையில், அவர் மன்னார் சென்று புத்தளம் திரும்பிய பின்னர் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் கலந்துகொண்ட மரண வீட்டிற்கு அநேகர் சென்றிருந்ததால், இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளை முடக்க வேண்டி ஏற்பட்டதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் H.விநோதன் குறிப்பிட்டார்.

இதேவேளை, தாராபுரத்தில் இறுதி சடங்கில் கலந்துகொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானும் அவரது சகோதரரும் வவுனியா வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இறுதி சடங்கில் கலந்துகொண்டு 20 நாட்கள் கடக்கின்ற நிலையில், அவர்களுக்கு எந்தவிதமான நோய் அறிகுறிகளும் தென்படாமையினால் மூன்று நாட்களுக்கு மாத்திரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி குறிப்பிட்டார்.

இதேவேளை, யாழ் மாவட்ட அரச அதிபரும் இன்று ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்டார்,

வவுனியாவில் சுய தனிமைப்படுத்தலுக்குட்பட்டவர்களிடம் கொரோனோ வைரஸ் பரிசோதனைக்கான இரத்த மாதிரிகள் சேகரிக்கும் செயற்பாடு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் சுகாதார வைத்திய அலுவலகத்தால் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இதனிடையே, திருகோணமலை மாவட்டத்தில் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் வருபவர்களை இராணுவத்தினர் கொரோன வைரஸ் தொற்று நீகுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்