by Staff Writer 07-04-2020 | 8:22 PM
Colombo (News 1st) கொரோனா நோயாளர்கள் பதிவான சில கிராமங்கள் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளன.
சுகாதார மற்றும் பாதுகாப்புத் தரப்பினரின் கண்காணிப்பின் கீழ், குறித்த கிராமங்களில் மக்கள் வாழ்கின்றனர்.
முடக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள கட்டான - கந்தசூரிந்துகம கிராமத்தில் இன்று கிருமி ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
நான்கரை வயதான குழந்தைக்கு அண்மையில் கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, இந்த கிராமம் முடக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.
வைரஸ் தொற்றிய குழந்தை தற்போது தேசிய தொற்றுநோயியல் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறது.
குழந்தையின் பெற்றோரும் சகோதரரும் அந்த வைத்தியசாலையில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் குறிப்பிட்டது.
கொரோனா தொற்றியதன் காரணமாக மேலும் சில கிராமங்களும் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளன.
கண்டி மாவட்டத்தின் அக்குரணையிலுள்ள தெலம்புகஹவத்த, களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகமவிலுள்ள அட்டளுகம, புத்தளம் மாவட்டத்தின் கடுமயான்குளம் மற்றும் யாழ். மாவட்டத்தின் தாவடி ஆகிய கிராமங்கள் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்னர் கொரோனா நோயாளி அடையாளங்காணப்பட்ட பேருவளை பிரதேசத்தின் பன்னில உள்ளிட்ட ஐந்து கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றாமல் செயற்பட்டவர்கள் தொடர்பிலான தகவல்கள் இன்றும் பதிவாகின.
பேருவளை - ஹெட்டிமுல்ல பகுதியில் தப்பியோடிய 33 வயதான ஒருவர் வாத்துவ - பொத்துபிட்டிய பகுதியில் நேற்று (06) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தொடர்பில் பிரதேசவாசிகள் வழங்கிய தகவலை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாம் சுகயீனமாகவுள்ளதாக அந்நபர் பொலிஸாரிடம் தெரிவித்ததையடுத்து, அவர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அநுராதபுரம் வைத்தியசாலையிலிருந்து தப்பியோடியவர் கெக்கிராவ பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரும் அவரின் சகோதரரும் வாகன விபத்தொன்று தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், தமக்கு கொரோனா அறிகுறிகள் காணப்படுவதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அவர் பரிசோதனைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் சகோதரரான மற்றைய சந்தேகநபரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நோய் அறிகுறிகள் காணப்படுவதாகக் கூறிய சந்தேகநபர் கெரோனா நோயாளி என மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்தனர்.
தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், வீட்டிலிருந்து வௌியேறிய இரத்தினபுரி - குருவிட்ட பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவர் குளியாப்பிட்டிய பகுதியிலுள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கியிருந்தமை தெரியவந்தது.
அவரை இன்று முதல் அந்த வீட்டிலேயே 14 நாட்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கு சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அந்த இளைஞர் கடந்த சில தினங்களாக சென்ற இடங்களைக் கண்டறிவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, அவர் தங்கியிருந்த குளியாப்பிட்டியவிலுள்ள வீட்டிற்கு அருகிலுள்ள வீடுகளில் வசிப்பவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.