அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்க புதிய திட்டங்கள்

அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்க புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன

by Staff Writer 07-04-2020 | 6:25 PM
Colombo (News 1st) ஊரடங்கு சட்டத்திற்கான அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்க புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு அமைய, பதில் பொலிஸ் மா அதிபர் C.T.விக்ரமரத்னவினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய திட்டத்தில் 4 முறைகளில் அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளது. பொலிஸ் தலைமையகம், பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம், பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் மற்றும் பொலிஸ் நிலையங்களூடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தில் 50 அல்லது அதற்கு அதிகமான ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கான அனுமதிப்பத்திரத்தை பொலிஸ் தலைமையகம் விநியோகிக்கவுள்ளது. கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 50 அல்லது அதற்கு அதிகமான ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கான அனுமதிப்பத்திரம் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தால் விநியோகிக்கப்படவுள்ளது. 10 அல்லது அதற்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டதும் 50 ஊழியர்களுக்கு குறைவான ஊழியர்களைக் கொண்டதுமான நிறுவனங்களுக்கு பிராந்தியங்களுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தினூடக பெற்றுக்கொள்ள முடியும். 10 ஊழியர்களுக்கும் குறைவான நிறுவனங்கள் , தங்களுக்கு பொறுப்பான பொலிஸ் நிலையங்களூடாக அனுமதியை பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அதேபோல, முக்கியமான தேவைகளுக்கான அனுமதிப்பத்திரத்தையும் பொலிஸ் நிலையத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும் ஊரடங்கு சட்டத்திற்கான அனுமதிப்பத்திரத்திற்குரிய புதிய சுற்றுநிரூபத்தை www.police.lk என்ற இணையத்தளத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.