போரிஸ் ஜோன்ஸன் வைத்தியசாலையில் அனுமதி

போரிஸ் ஜோன்ஸன் வைத்தியசாலையில் அனுமதி

by Bella Dalima 06-04-2020 | 3:31 PM
Colombo (News 1st) பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு 10 நாட்களின் பின்னர் மீள பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. உடல் உஷ்ணம் உள்ளிட்ட தொடர்ச்சியான கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் அவர் லண்டனிலுள்ள வைத்தியசாலைக்கு நேற்று மாலையில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். வைத்தியர்களின் அறிவுறுத்தல்களுக்கமைய, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரித்தானியப் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவின் நியூயார்க்கில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கையில் முதற்தடவையாக வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அமெரிக்கா முழுவதிலும் வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருவதுடன், மேலும் மோசமான நிலை எதிர்வரும் வாரங்களில் பதிவாகுமென நிபுணர்கள் எச்சரித்திருந்த நிலையிலேயே இந்த எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக நியூயார்க் ஆளுநர் அன்ட்ரூ கோமோ தெரிவித்துள்ளார். இருப்பினும், அங்கு புதிதாக தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையினை நியூயார்க் ஆளுநர் தெரிவிக்கவில்லை. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியாக நியூயார்க் மாநிலம் பதிவாகியுள்ளது. நேற்றைய தினத்தில் நியூயார்க்கில் 594 பேர் மரணமடைந்துள்ளதுடன், இதனால் அந்த மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,159 ஆக உயர்வடைந்துள்ளது. முன்னைய தினத்தில் 630 உயிரிழப்புகள் பதிவாகியிருந்த நிலையில், அந்த எண்ணிக்கையிலும் நேற்றைய தினம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா முழுவதிலும் 3,31,151 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 9,420 மரணங்கள் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.