தனிமைப்படுத்தப்பட்டோருக்கு விசேட ஆலோசனை

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வௌியேறியோருக்கு விசேட ஆலோசனை

by Staff Writer 06-04-2020 | 11:30 AM
முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படை தளத்தில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்ட 203 பேர் இன்று அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 22 ஆம் திகதி இந்தியாவிலிருந்து வருகை தந்த சிலரே இன்று தனிமைப்படுத்தும் நிலையத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது. தனிமைப்படுத்தும் நிலையத்திலிருந்து அனுப்பப்பட்டவர்களில் 56 ஆண்களும் 147 பெண்களும் சிறுவர் ஒருவரும் 5 பௌத்த தேரர்களும் அடங்குகின்றார்கள். 14 நாட்கள் கண்காணிப்பின் பின்னர் இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, தனிமைப்படுத்தி, கண்காணிக்கும் நிலையங்களிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளவர்கள் மேலும் 14 நாட்கள் வீடுகளில் சுய தனிமையில் ஈடுபட வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் குண்டசாலை தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 279 பேர் நேற்று அனுப்பி வைக்கப்பட்டதாக பாதுகாப்பு பிரிவின் பதில் தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார். மேலும், 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு இவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி கூறியுள்ளார். தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஒருவர் சில நாட்களுக்குள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டமையால், மேலதிகமாக 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.