முதியோர், அங்கவீனமுற்றோர், சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு நாளை வழங்கப்படவுள்ளது

முதியோர், அங்கவீனமுற்றோர், சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு நாளை வழங்கப்படவுள்ளது

முதியோர், அங்கவீனமுற்றோர், சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு நாளை வழங்கப்படவுள்ளது

எழுத்தாளர் Staff Writer

05 Apr, 2020 | 5:54 pm

Colombo (News 1st) முதியோர், அங்கவீனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ள கொடுப்பனவை நாளை (06) முழுமையாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய, அங்கவீனமுற்றோருக்கான கொடுப்பனவு மற்றும் காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு தலா 5000 ரூபா அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படவுள்ளது.

தற்போது கொடுப்பனவுகளை பெறும் சிறுநீரக நோயாளர்களுக்கும் அவர்களில் காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களுக்குமான 5000 ரூபா கொடுப்பனவை நாளை வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதேபோல், தற்போது 2000 ரூபாவை முதியோர் கொடுப்பனவாக பெறும் 70 வயதிற்கும் மேற்பட்டோருக்கு மேலதிகமாக 3000 ரூபா வழங்கப்படவுள்ளது.

அதற்கமைய, ஏப்ரல் மாதத்திற்குரிய முதியோர் கொடுப்பனவாக 5000 ரூபா நாளை வழங்கப்படவுள்ளது.

அதேபோல், காத்திருப்பு பட்டியலில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்டோருக்கும் முதியோர் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அனைத்து கொடுப்பனவுகளையும் கிராம சேவகர்களூடாக நாளை பயனாளர்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

சமுர்த்தி கொடுப்பனவு உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகளை எதிர்வரும் 7 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முன்னெடுப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

விவசாய ஓய்வூதியக் கொடுப்பனவு, கடற்றொழில் ஓய்வூதிய கொடுப்பனவு ஆகியவற்றை செலுத்துவது தொடர்பில் விவசாய திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, கடந்த 02 ஆம் 03 ஆம் திகதிகளில் ஓய்வூதிய கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள முடியாது போனவர்கள் நாளை அதனை பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்