துருக்கி அரசிற்கு எதிராக 288 நாட்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்திய இளம் பாடகி உயிரிழப்பு

துருக்கி அரசிற்கு எதிராக 288 நாட்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்திய இளம் பாடகி உயிரிழப்பு

துருக்கி அரசிற்கு எதிராக 288 நாட்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்திய இளம் பாடகி உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

05 Apr, 2020 | 4:38 pm

Colombo (News 1st) துருக்கியில் அரசுக்கு எதிராக 288 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்திய இளம் பாடகி ஹெலின் போலக் உயிரிழந்துள்ளார்.

துருக்கியை சேர்ந்த 28 வயதான இளம் பாடகி ஹெலின் போலக், நாட்டுப்புற இசையினை அடிப்படையாகக் கொண்டு பாடல்களை உருவாக்கும் ‘குரூப் யோரம்’ என்ற பிரபலமான இசைக்குழுவை சேர்ந்தவர்.

அரசுக்கு எதிரான புரட்சிகர கருத்துக்களை பாடி வந்த ‘குரூப் யோரம்’ இசைக்குழுவை துருக்கி அரசு 2016 ஆம் ஆண்டு தடை செய்தது. குழுவில் சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து தங்கள் இசைக்குழு மீதான தடையை நீக்கவும், கைது செய்யப்பட்ட சகாக்களை விடுவிக்கக் கோரியும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார் ஹெலின் போலக்.

கடந்த மாதம் ஹெலினின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை தொடர்ந்து மனித உரிமை ஆர்வலர்கள் குழுவானது துருக்கி அரசிடம் ஹெலினின் போராட்டம் குறித்து பேசியது.

ஆனால், ஹெலின் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்தாமல், அவரது கோரிக்கைகளை பரிசீலிக்க முடியாது என துருக்கி அரசு கூறிவிட்டது. இதற்கிடையில், கடந்த மார்ச் 11 ஆம் திகதி ஹெலின் வலுக்கட்டாயமாக சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.

எனினும், சிகிச்சைக்கு அவர் ஒத்துழைக்காததால் ஒரே வாரத்தில் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டார். அதன் பின்னரும் அவர் அரசுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தார்.

இந்த நிலையில், கடந்த 288 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த ஹெலின் போலக் நேற்று முன்தினம் அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்