யாழில் அதிக விலையில் பொருட்கள் விற்கப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு

by Staff Writer 04-04-2020 | 8:53 PM
Colombo (News 1st) அத்தியாவசிய உணவுப் பொருட்களை வீடுகளுக்கே விநியோகிக்கும் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தினாலும் கிராமப் பகுதிகளில் அது வெற்றிகரமாக இடம்பெறுகிறதா என்ற கேள்வி எழுகிறது. இந்த நிலையில், சில பகுதிகளில் அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த நிலையில் யாழ். மாவட்டத்தில் அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். கட்டுப்பாட்டு விலைகள் அறிவிக்கப்பட்டாலும், அந்த விலைக்கு பொருட்கள் விற்கப்படுவதில்லை என சுட்டிக்காட்டினர். அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் 1977 என்ற இலக்கத்திற்கு அழைத்து நுகர்வோர் விவகார அதிகார சபையில் முறைப்பாடு செய்ய முடியும். இதேவேளை, யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் இந்த விடயத்தை யாழ். அரச அதிபரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். கட்டுப்பாட்டு விலைகளிலும் பார்க்க மிகக்கூடுதலான விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பலரும் முறைப்பாடு செய்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார். அத்தியாவசிய உணவுப் பொருட்களை பதுக்கி வைத்து கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்வோர் அடையாளம் காணப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென யாழ். மாவட்ட அரச அதிபரிடம் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏனைய செய்திகள்