மருதானையில் 2000 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

மருதானையில் 2000 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

by Staff Writer 02-04-2020 | 2:44 PM
Colombo (News 1st) மருதானை - ஆர்னோல்ட் ரத்னாயக்க மாவத்தையில் வசிக்கும் 2,000 பேரை வீடுகளில் தனிமைப்படுத்தியுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. மருதானையை சேர்ந்த, தொற்றுக்குள்ளான ஒருவர் நேற்று உயிரிழந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளளதாக கொழும்பு பிரதம சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி குறிப்பிட்டுள்ளார். இதன்பிரகாரம் குறித்த நோயாளி வசித்த தொடர்மாடி குடியிருப்பு உள்ளிட்ட 18 மாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அவர்களுக்கான உணவு மற்றும் ஏனைய தேவைகள் கொழும்பு மாநகர சபையூடாக வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவரின் மகள், மருமகன் மற்றும் பேரப்பிள்ளைகள் ஆகியோர் அங்கொடை தொற்று ​நோயியல் நிறுவகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில், தொற்று ஏற்பட்ட நோயாளிகளுடன் தொடர்புகளை பேணிய 308 பேர் ஏற்கனவே கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மறு அறிவித்தல் வரை கொழும்பு நகரிலுள்ள சிறுவர் இல்லங்கள் மற்றும் வயோதிபர் இல்லங்களுக்கு வௌிநபர்களை அனுமதிக்க வேண்டாம் என டொக்டர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார். கொழும்பு நகரில் இதுவரை 12 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரே நேற்றைய தினம் உயிரிழந்தவராவார்.