தகுதியற்றோருக்கு அனுமதிப்பத்திரம்? சட்ட நடவடிக்கை

தகுதியற்றோருக்கு ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரம் வழங்கும் பொறுப்பதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை

by Staff Writer 02-04-2020 | 3:52 PM
Colombo (News 1st) ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரத்தை தகுதியற்றவர்களுக்கு வழங்கும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார். அத்தியவசிய தேவைகளுக்காக மாத்திரம் ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரத்தை தவறாகப் பயன்படுத்துதல், அனுமதிப்பத்திரத்தின் மூலம் வேறு நபர்களை வாகனங்களில் ஏற்றிச்செல்லல் உள்ளிட்ட நடவடக்கைகளுக்கு எதராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அத்துடன், ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரமின்றி நடமாடுபவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். இந்தக் காலப்பகுதியில் கைப்பற்றப்படும் வாகனங்கள் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்தப்படும் என அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார். குறித்த வாகனங்கள் மீண்டும் உரிமையாளர்ளிடம் கையளிக்கப்பட மாட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், எஞ்சிய 19 மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 6ஆம் திகதி காலை 6 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய செயற்பாடுகளின் பொருட்டு மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது.