அவுஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசி குறித்து ஆய்வு

அவுஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசி குறித்த ஆய்வு முன்னெடுப்பு

by Staff Writer 02-04-2020 | 3:38 PM
Colombo (News 1st) அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் கொரோனா வைரஸை முறியடிப்பதற்கான இரு தடுப்பூசிகள் தொடர்பிலான ஆய்வுகளை முன்னெடுத்துள்ளனர். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் Inovio மருந்தாக்கல் நிறுவனத்தினால் இந்தத் தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்தத் தடுப்பூசிகளை விலங்குகளில் பரிசோதிப்பதற்கான அனுமதி உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசி மனிதர்களுக்கு பாதுகாப்பானதா என்பது தொடர்பில் அவுஸ்திரேலிய தேசிய விஞ்ஞான நிறுவகம் மதிப்பீடு செய்யவுள்ளது. கொரோனா வைரஸின் தீவிர பரவல் தொடர்பில் ஆழ்ந்த கவலை கொள்வதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் எதனம் கெப்ரியேசஸ் தெரிவித்துள்ளார். Covid-19 வைரஸ் விரைவில் உலக நாடுகள் அனைத்திலும் பரவக்கூடும் எனவும் அவர் கூறியுள்ளார். உலகில் மனித சமூகத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள கொரோனா வைரஸால் அடுத்த சில நாட்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 இலட்சமாக அதிகரிக்கும் எனவும் அடுத்த சில நாட்களில் Covid-19 வைரஸினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50,000 ஐ அடையும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒரே நாளில் 848 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒரு நாளில் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. அமெரிக்காவில் உயிரிழந்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 5,000 ஐ கடந்துள்ளது. அமெரிக்காவில் புதிதாக 1049 பேர் உயிரிழந்துள்ளதுடன், உயிரிழப்புகளின் எண்ணிக்கை 5,102 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் புதிததாக 727 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலி எண்ணிக்கை 13,155 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, ஸ்பெயினில் 923 பேர் புதிதாக உயிரிழந்துள்ளதுடன் அங்கு உயிரிழப்புகளின் எண்ணிக்கை 9,387 ஆக அதிகரித்துள்ளது. சர்வதேச ரீதியில் 47,264 கொரோனா உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன், தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 936,865 ஆக அதிகரித்துள்ளது.