ஆறு மாவட்டங்களுக்கான ஊடரங்கு சட்டம் தொடர்ந்தும்..

ஆறு மாவட்டங்களுக்கான ஊடரங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுல்

by Staff Writer 01-04-2020 | 2:42 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து அபாய வலயமாக அறிவிக்கப்பட்ட கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. நாட்டின் ஏனைய 19 மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம், இன்று (01) காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 6ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கையினூடாக அறிவித்துள்ளது. ஏப்ரல் 6ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அந்த பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய செயற்பாடுகளின் பொருட்டு மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 19 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து பெருமளவு மக்கள் பொருட்கொள்வனவுக்காக ஒன்றுகூடியுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில், ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் திறந்துவைக்குமாறு இராணுவத் தளபதி லெவ்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவுறுத்தியுள்ளார். இதனிடையே, வர்த்தக நிலையங்களுக்கு அருகாமையில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.