by Staff Writer 31-03-2020 | 6:55 PM
Colombo (News 1st) டில்லியில் இடம்பெற்ற மத நிகழ்வுகளுக்காக ஒன்று கூடிய நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட ஒரு மத அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்று கடந்த 8 முதல் 10ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ளது.
1000 இற்கும் அதிகமானோர் ஒன்றுகூடிய குறித்த கட்டடமானது டில்லி அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்டிருந்தது.
அவர்களில் குறைந்தது 24 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்ட 300 பேருள் இந்த 24 பேர் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஏனைய 700 பேரும் கண்காணிப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட இந்தோனேஷியாவில் இருந்து வருகைதந்திருந்த மத போதகர் மூலம் வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாகக் கூறப்படுகின்றது.
இதேவேளை, உலகளாவிய ரீதியில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 8 இலட்சத்தை தாண்டியுள்ளது.
இதன்பிரகாரம் 8 இலட்சத்து 2,369 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 38,990 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், 172,319 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.