by Staff Writer 31-03-2020 | 2:48 PM
Colombo (News 1st) வௌிநாடுகளில் இருந்து வருகைதந்து வன்னி விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்ட 206 பேர் இன்று (31) வீடு திரும்பியுள்ளனர்.
விமானப்படை முகாமுக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தோரே இவ்வாறு வீடு திரும்பியுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
அவர்கள் கடந்த 17ஆம் திகதி வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கண்காணிப்பு நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களாவர்.
கடந்த முதலாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 20,000 இற்கும் அதிகமானோர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.
இவர்களில் 11,000 இற்கும் அதிகமானோர் சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கையை முழுமையாக நிறைவுசெய்துள்ளதாக
பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும் 7,000 பேர் தொடர்ந்தும் சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாக அவர் மேலும் கூறினார்.
இதனிடையே, தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மேலும் 321 பேர் இன்று வீடு திரும்பியுள்ளனர்.
வவுனியா, புனானை கண்காணிப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களே இன்று வீடு திரும்பியதாக இராணுவத்தளபதி, லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அவர்கள் இத்தாலி, தென் கொரியா, பிரித்தானியா உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து இலங்கைக்கு திரும்பியவர்களாவர்.
இதனிடையே, தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையங்களில் தங்கியிருந்த 134 பேர் நேற்று அவர்களது வீடுகளுக்கு திரும்பினர்.
அவர்கள் தியத்தலாவ, புனானை உள்ளிட்ட கண்காணிப்பு மத்திய நிலையங்களில் தங்கியிருந்தவர்களாவர்.
மேலும் 1,960 பேர் கண்காணிப்பு மத்திய நிலையங்களில் தங்கியுள்ளதாக இராணுவத்தளபதி, லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.