Update: ஊரடங்கு சட்டம் தொடர்பிலான அறிவித்தல்

ஊரடங்கு சட்டம் தொடர்பிலான அறிவித்தல்

by Staff Writer 30-03-2020 | 6:56 PM
Colombo (News 1st) கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் முதலாம் திகதி காலை 6 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. நாட்டின் 19 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று (30) காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தளர்த்தப்பட்டு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய விடயங்களில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கிடைக்கும் அனைத்து தகவல்களையும் ஆராய்ந்து ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துதல், ஊடரங்கு சட்டத்தை அமுல்படுத்தும் பிரதேசங்களை தெரிவுசெய்தல் மற்றும் தனிமைப்படுத்தப்படும் பிரதேசங்களை தீர்மானித்தல் தொடர்பான விடயங்களை அரசாங்கத்தின் உயர்மட்டமே தீர்மானிக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏதேனுமொரு பகுதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மாற்றுவதற்கான தேவையிருப்பின், அது தொடர்பான தகவல்களை கொரோனா வைரஸ் ஒழிப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியிடம் அறிவிக்க வேண்டும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் செயற்பாடுகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் தீர்மானங்களை பிரதேச மட்டத்தில எடுப்பதை தவிர்க்குமாறு ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.