கொரோனா தாக்கம்: பலி எண்ணிக்கை 30,000 ஐ தாண்டியது

உலகையே உலுக்கிய கொரோனா: பலி எண்ணிக்கை 30,000 ஐ தாண்டியது

by Chandrasekaram Chandravadani 29-03-2020 | 7:48 PM
Colombo (News 1st) உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31,191 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸினால் உலகளாவிய ரீதியில் பதிவாகியுள்ள உயிரிழப்புகளை பொறுத்தவரையில் இத்தாலி முதலிடத்திலும் ஸ்பெயின், சீனா முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களிலும் ஈரான், பிரான்ஸூக்கு அடுத்த படியாக அமெரிக்காவும் இடம்பிடித்துள்ளது. Covid - 19 தொற்றால், 199 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 6,78,905 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை பதிவான உயிரிழப்புகளில் இரண்டே நாட்களில் இரு மடங்கு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் 1,23,781 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, நியூயோர்க்கிற்கு பயணங்களை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலுவான பயண எச்சரிக்கைகளை விடுத்துள்ளார். இதேவேளை, ஸ்பெயின் இளவரசி மரியா தெரேசா, கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் இது கொரோனா வைரஸால் அரச குடும்பமொன்றில் ஏற்பட்ட முதலாவது உயிரிழப்பாக பதிவாகியுள்ளது. ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 838 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். நேற்று மாத்திரம் 832 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறிருக்க, ஸ்பெயினில் வைரஸ் தொற்றுக்குள்ளான 6,528 பேர் இன்று புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனடிப்படையில், ஸ்பெயினில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை நேற்று 72,248 ஆக காணப்பட்ட நிலையில், இன்று அந்த எண்ணிக்கை 78,797 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை ஆயிரத்தை எட்டியுள்ளது. அங்கு தற்போது 979 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளும் 21 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடுமையான நடவடிக்கைகளை மெற்கொண்டமைக்காக தாம் மன்னிப்பு கோருவதாகவும் எனினும் இது அவசியமான நடவடிக்கை என பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இதேவேளை, பிலிப்பைன்ஸில் கொரோனா தொற்றுக்குள்ளான 130 பேர் புதிதாக அடையாளங்காணப்பட்டுள்ளதுடன் அங்கு தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,285 ஆக அதிகரித்துள்ளது. 144 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, பிரித்தானியாவில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்த நிலையில் அங்கு பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சீனாவில் புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. சீனாவில் நேற்று 45 பேர் மாத்திரமே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அவர்களில் ஒருவரை தவிர ஏனைய அனைவரும் வௌிநாடுகளிலிருந்து சீனாவுக்கு வருகை தந்தவர்கள் என தெரியவந்துள்ளது. ஜெர்மனில் ஒரே இரவில் 3,965 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளமை உறுதி செய்யப்பட்டதையடுத்து அங்கு தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 52 1,547 ஆக அதிகரித்துள்ளது. 389 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, ஜெட்டாவுக்குள் பிரவேசிக்கும் மற்றும் வௌியேறும் எல்லைகளை சவுதி அரேபியா மூடியுள்ளது. மியன்மார் விசா விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. தாய்லாந்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 143 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் ஒருவர் மாத்திரம் உயிரிழந்துள்ளார். இதேவேளை, கனேடிய பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோவின் மனைவி சோபி ட்ரூடே கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துவருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நியூசிலாந்தில் கொரோனா தொற்றினால் முதலாவது உயிரிழப்பு பதிவாகியுள்ளது. 70 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளதுடன் அவருக்கு எற்கனவே இன்புளூவன்சா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நியூசிலாந்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றுக்குள்ளான 60 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அங்கு தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 476 ஆக அதிகரித்துள்ளது. தென் கொரியாவில் 9,583 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 5,033 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.