கொரோனா சந்தேகத்தில் ஒருவர் யாழ். வைத்தியசாலைக்கு

கொரோனா தொற்று சந்தேகத்தில் ஒருவர் கிளிநொச்சியிலிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு...

by Staff Writer 28-03-2020 | 7:33 PM
Colombo (News 1st) கிளிநொச்சியில் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் யாழ். போதனா வைத்தியாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். 36 வயதான நோயாளி இன்று (28) பிற்பகல் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் கே. இராகுலன் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்துள்ளார். கடந்த 4 நாட்களுக்கு முன்னர் குறித்த நபருக்கு காய்ச்சல் மற்றும் சுவாசக்கோளாறு ஏற்பட்ட நிலையில், அவர் இன்று வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்ததாகவும் அவர் கூறினார். குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பயணிகளை அழைத்துச்செல்லும் வாடகை வாகன சாரதி என்பதுடன் அவர் கடந்த 14 நாட்களுக்குள் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் கே. இராகுலன் மேலும் குறிப்பிட்டுள்ளார். கொழும்பிலிருந்த காலப்பகுதியில் இந்தோனேசிய பிரஜை மற்றும் சில வௌிநாட்டு பிரஜைகளை அவர் தனது வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளமையும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், குறித்த நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தின் பேரில் அவரை மேலதிக பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் கூறியுள்ளார். குறித்த நபர் தொடர்பான வைத்திய பரிசோதனை அறிக்கை நாளை கிடைக்குமெனவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலையில் இதுவரை அனுமதிக்கப்பட்ட 34 பேருக்கு கொரோனா தொற்று தொடர்பிலான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இன்றும் இருவருடைய இரத்தமாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இதேவேளை யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட ஒருவர் தற்போது IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில் யாழ். மாவட்டம் கொரோனா பரவக்கூடிய அபாய வலயமாக அறிவிக்கப்பட்டு, அங்கு மறு அறிவித்தல் வரை ஊரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.