கடனை மீள பெறுவதை இடைநிறுத்துமாறு கோரிக்கை

76 நாடுகளிடமிருந்து கடனை மீள பெறுவதை இடைநிறுத்துமாறு உலக வங்கி G20 நாடுகளிடம் கோரிக்கை

by Staff Writer 27-03-2020 | 3:05 PM
Colombo (News 1st) உலகின் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளிடமிருந்து கடனை மீள பெறுவதை இடைநிறுத்துமாறு உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியன G20 நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளன. கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள சிக்கல்களை கருத்திற்கொண்டு இரு நிறுவனங்களும் இணைந்து கூட்டறிக்கையூடாக இந்த கோரிக்கையை விடுத்துள்ளன. அவ்வாறான 76 நாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியன தெரிவித்துள்ளன. கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதால் பொருளாதார ரீதியில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள குறித்த நாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய அவசியம் குறித்தும் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளன. இதனடிப்படையில், 39 ஆபிரிக்க நாடுகளும் 15 கிழக்காசிய நாடுகளும் 6 தெற்காசிய நாடுகளும் ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய நாடுகளும் 8 இலத்தின் அமெரிக்கா மற்றும் கரிபியன் நாடுகளும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவின் 3 நாடுகளும் இதில் அடங்குகின்றன. தெற்காசிய வலயத்தில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், மாலைத்தீவு, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளடங்குகின்றன. 2017 ஆம் ஆண்டில் இருந்து பொலிவியா, வியட்னாம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள், முன்னேற்றமடைந்துள்ளதுடன், அவ்வாறான நிதி வசதிகள் தேவையான நாடாக இலங்கை கருதப்படுவதில்லை. எவ்வாறாயினும், சிறப்பு சலுகைக்கு அமைய நிவாரணங்களை வழங்குவதற்கான சந்தர்ப்பம் காணப்படுகின்றது.