Colombo (News 1st) தோட்டத் தொழிலாளர்களுக்கு கடனடிப்படையில் அத்தியாவசியப் பொருட்களை எதிர்வரும் இரண்டு நாட்களில் விநியோகிக்க உள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் புஷ்பகுமார தெரிவித்தார்.
இதேவேளை, மலையகத்தின் சில பகுதிகளில் தோட்டத் தொழிலாளர்கள் இன்று தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.
ஹட்டன் - டிக்கோயா தோட்டத்தின் டன்பார் பிரிவில் தோட்டத் தொழிலாளர்கள், ஊரடங்கு அமுலில் இருக்கும் காலத்தில் தோட்டத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட முடியும் என்ற அனுமதிக்கு அமைவாக கொழுந்து பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
எவ்வாறாயினும், வறட்சியான காலநிலையால் தாம் தொழிலை வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் மாத்திரமே முன்னெடுப்பதாகவும் இதனால் பொருளாதார ரீதியில் கடும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, தோட்டத் தொழிலாளர்களுக்கு கடனடிப்படையில் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க உள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் புஷ்பகுமார தெரிவித்தார்.
தோட்டக் கம்பெனிகளிடமிருந்து 50 வீதமும் தோட்ட உட்கட்டமைச்சிடமிருந்து 50 வீதமும் நிதியைப் பெற்று தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதாந்த கடனடிப்படையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அவர்களிடம் பணம் இல்லாததால் கடனுக்கு அத்தியாவசியப் பொருட்களை கொடுக்கவுள்ளோம். தோட்ட நிறுவனங்களால் அந்த பொருட்கள் வழங்கப்படவுள்ளன. அதற்கமைய, தோட்டத் தொழிலாளர்கள் தோட்டங்களில் இருக்கும் நிறுவனங்களில் கடனடிப்படையில் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும். அதனை விநியோகிப்பதற்கான முழுப்பொறுப்பையும் தோட்ட நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது. அவர்கள் இதற்கான பணத்தை 2 மாதங்களில் தொழிலாளர்களின் சம்பளத்தில் அறவிடுவதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர்
என நுவரெலியா மாவட்ட செயலாளர் கூறினார்.
இந்த நடவடிக்கை எதிர்வரும் இரண்டு நாட்களில் நுவரெலியா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.