கொரோனா: சீனாவை விஞ்சியது அமெரிக்கா

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் சீனாவை விஞ்சியது அமெரிக்கா

by Bella Dalima 27-03-2020 | 8:09 PM
Colombo (News 1st) உலகிலுள்ள சகல நாடுகளையும் விஞ்சும் வண்ணம், அதிக கொரோனா தொற்றாளர்களைக் கொண்ட நாடாக அமெரிக்கா பதிவாகியுள்ளது. Worldometers இணையத்தளத்திற்கு அமைய, அமெரிக்காவில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1300-ஐக் கடந்துள்ளது. அமெரிக்காவின் - நியூயோர்க்கில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அதிகளவில் பதிவாகியுள்ளனர். அங்கு சுமார் 39,000 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். நியூ ஜெர்ஸி, கலிபோர்னியா, வாஷிங்டன் பிராந்தியங்களிலும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அதிகளவில் பதிவாகியுள்ளனர். சீனா மற்றும் இத்தாலியினை விடவும் அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. 85,600-க்கும் அதிகளவிலானோர் அமெரிக்காவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 பிராந்தியங்களைச் சேர்ந்த மக்களை வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதேவேளை, வாஷிங்டன் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வுகளுக்கு அமைய, ஏப்ரல் மாதமளவில் அமெரிக்காவில் நாளாந்தம் நேரும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 2300 ஆக அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கு மாதங்களுக்குள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடக்கும் என அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு அமைய, அமெரிக்காவில் 3.3 மில்லியன் மக்கள் தொழில்களுக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.