அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கே விநியோகிப்பதற்கான நடவடிக்கை ஆரம்பம்

அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கே விநியோகிப்பதற்கான நடவடிக்கை ஆரம்பம்

அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கே விநியோகிப்பதற்கான நடவடிக்கை ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

27 Mar, 2020 | 3:46 pm

Colombo (News 1st) மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கே விநியோகிப்பதற்கான நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிராம மட்டத்திலுள்ள மக்களின் தேவைகளை அறிந்துகொள்வதற்காக, கிராமமொன்றிற்கு 5 அதிகாரிகளை ஈடுபடுத்தியுள்ளதாக பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதனடிப்படையில், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அதிகாரிகள், இடர் முகாமைத்துவ அதிகாரிகள், விவசாய அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அதிகாரிகள் ஆகியோர் இதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மக்களின் தேவைகளைக் குறித்த அதிகாரிகள் கண்டறிந்த பின்னர், அத்தியாவசியப் பொருட்களை உரிய விலையில், பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஊடாக வழங்கப்படல் வேண்டும் எனவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்வதற்காக தனியாரின் லொறிகளை பயன்படுத்துவதற்கான அதிகாரம் பிரதேச செயலாளர்களுக்கும் மாவட்ட செயலாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், குறித்த பகுதிகளிலுள்ள லொறிகள் தொடர்பிலான தகவல்களை சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதனை தவிர, லொறிகளை வழங்குவதற்கு விருப்பமுடைய லொறி உரிமையாளர்கள் இருப்பின், பெயர் விபரங்களை பிரதேச செயலாளர்களுக்கு வழங்குமாறும் பிரதமர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், மக்களுக்குத் தேவையான மருந்துகளை வீடுகளுக்கு விநியோகிப்பதற்கு நாளை முதல் தபால் ஊ​ழியர்களை ஈடுபடுத்தவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன குறிப்பிட்டார்.

பிரதேச செயலக பிரிவுகளில் ஒரு தனியார் மருந்தகமேனும் திறந்து வைத்திருத்தல் அவசியம் என பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தமது பிரிவுகளிலுள்ள மக்களுக்கு தேவையான மருந்துகளை, வீடுகளுக்கே விநியோகிக்குமாறு அனைத்து மருந்தகங்களின் உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகத்தின் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

அத்தியாவசிய மக்கள் சேவையை முறையாக நடத்திச் செல்வதற்காக ஸ்தாபிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி செயலணி பணிகளை ஆரம்பித்துள்ளது.

வழிநடத்தல் செயற்பாடுகள் பசில் ராஜபக்ஸவின் தலைமையில் இடம்பெறுகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்