பசில் ராஜபக்ஸ தலைமையிலான செயலணியிடம் சிறப்பு அதிகாரம் ஒப்படைப்பு

by Staff Writer 26-03-2020 | 8:13 PM
Colombo (News 1st) மக்களின் இயல்பு வாழ்க்கையை பேணிச் செல்வதற்கான நடவடிக்கைகளை வழிநடத்துவதற்கான அதிகாரம் ஜனாதிபதியின் சிறப்பு பிரதிநிதி பசில் ராஜபக்ஸ தலைமையிலான செயலணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று பிற்பகல் அறிவித்தது. இந்த செயலணியின் செயலாளராக பிரதமரின் மேலதிக செயலாளர் அன்ரன் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். மாகாண ஆளுநர்கள், அமைச்சுகளின் செயலாளர்கள், முப்படைத் தளபதிகள், பதில் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு உயர் அதிகாரிகள், திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட 40 பேர் செயலணியில் அங்கம் வகிக்கின்றனர். இந்த செயலணிக்கான அதிகாரம் மற்றும் பொறுப்புக்களை ஜனாதிபதி வர்த்தமானியில் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவும் அபாயம் அதிகமுள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம், யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு முக்கியத்துவமளித்து இந்த செயலணி செயற்படவுள்ளது.